வியாபாரி ஒருவர் பெரிய தொழிலதிபராக வர வேண்டும் என ஆசைப்பட்டார். ஆசைப்பட்டால் மட்டும்போதுமா அதற்கு உழைக்க வேண்டுமல்லவா... அவருக்கு அது தெரியவில்லை. உழைப்பின் பக்கம் அவர் செல்லாததால் தோல்வி அவரை அணைத்துக்கொண்டது. தொழிலில் நஷ்டத்தை சந்தித்தார். காற்று போன பலுான் போல அவரது மனம் மாறியது. வீட்டிற்கு செல்ல மனமில்லை. கால்போன போக்கில் ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கே மெல்லிய நிலா வெளிச்சம் ஆற்றங்கரையை அலங்கரித்தது. ஓரிடத்தில் அமர்ந்தவர் தனது நினைவுகளை ஓடவிட்டார். வியாபாரத்தில் தோற்றுப்போன கடந்தகாலம் அவரை அழுத்தியது. குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறோம் என்னும் எதிர்காலம் அவரை சுக்குநுாறாக்கியது. இப்படி மனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, கையும் அருகில் இருந்த கற்களை நோக்கி ஓடியது. அதை எடுத்து ஆற்றில் வீசிக்கொண்டே இருந்தது. இப்படி இரவு முழுவதும் அவர் அங்கேயே தங்கினார். இதனால் கற்களின் எண்ணிக்கை குறைந்தது. பொழுதுவிடிய ஆரம்பித்தது. கதிரவன் அங்கு வெளிச்சத்தை கொடுக்க ஆரம்பித்தான். இரவு முழுவதும் தான் வீசிக்கொண்டிருந்த கற்கள் அங்கே ஒளி வீசியது. காரணம் அது சாதாரண கூழாங்கல் அல்ல. விலை உயர்ந்த வைரக்கல். இதைப்பார்த்தவரின் மனதில் இருள் படர்ந்தது. ‘என்னடா இது. கைக்கு கிடைத்ததை அறியாமல் இப்படி சிந்தனையில் இருந்துவிட்டோமே’ என வருத்தப்பட்டார்.