உஜ்ஜீவநாதரிடம் கேளுங்க! மயக்கம்... கலக்கம்... மனதிலே குழப்பம்... வாழ்க்கையில் நடுக்கம்...என மனதின் கோணல்களை வெவ்வேறு வார்த்தைகளில் குறிப்பிடலாம். இந்த பிரச்னைக்கெல்லாம் தீர்வு அளித்து நீங்கள் தலை நிமிர்ந்து வாழ வழி காட்டுகிறார் திருச்சி அருகிலுள்ள கற்குடி உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் இவரை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். மிருகண்டு முனிவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. தனக்கு மகன் பிறக்க வேண்டும் என சிவனை நோக்கி தவமிருந்தார். ‘‘புத்தி இல்லாத, உடல்குறையுள்ள நுாறு வயது வரை வாழும் மகன் வேண்டுமா? பதினாறு ஆண்டு வாழ்ந்தாலும் புகழுடன் வாழும் புத்திசாலி மகன் வேண்டுமா?” எனக் கேட்டார் சிவன். புத்திசாலி மகன் வேண்டும் என்றார் முனிவர். அதன்படி ஞானபுத்திரனாக பிறந்த பிள்ளைக்கு ‘மார்க்கண்டேயன்’ என பெயரிட்டார் முனிவர். 16 வயதை அடைந்ததும் உயிரைப் பறிக்க வந்தார் எமதர்மன். சிவன் கோயிலுக்குள் ஓடிச் சென்று கருவறையில் ஒளிந்து வாழ்ந்தான் மகன். மரணத்தின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என உறுதியெடுத்த மார்க்கண்டேயன் கடைசியாக உய்யக்கொண்டான் திருமலையை அடைந்தான். சிவனிடம் பிரச்னையைச் சொல்லி சரணாகதி அடைந்தான். எமனிடம் இருந்து காப்பாற்றி, ‘என்றும் பதினாறு’ என்று வாழ வரமளித்தார். அங்கிருந்து திருவேற்காடு கோயிலுக்கு வரவழைத்து ‘சிரஞ்சீவி (என்றும் வாழ்பவர்) யாக வாழ வழிகாட்டினார். மார்க்கண்டேயருக்கு வாழ்வு தந்ததால் இங்கு சுவாமிக்கு ‘உஜ்ஜீவநாதர்’ (அழியா வரம் தருபவர்) என்று பெயர். விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்பதால் ‘கற்பகநாதர் என்றும் பெயருண்டு. இங்குள்ள அம்மன் பெயர் அஞ்சனாட்சி. அஞ்சனம் என்றால் கண்மை. அம்மனின் கண்களில் மை தீட்டப்படுவதால் இப்பெயர். பாலாம்பிகை என்னும் பெயரில் இன்னொரு அம்மன் சன்னதியும் உள்ளது. இக்கோயிலில் லட்சுமியின் சகோதரி ஜேஷ்டாதேவிக்கு சன்னதி உள்ளது. நிம்மதியாக துாங்கும் பாக்கியத்தை அருள்பவள் இவள். ஜேஷ்டாவின் ஒருபுறத்தில் மாடு முகம் கொண்ட மாடனும், மறுபுறத்தில் சேடிப்பெண்ணும் உள்ளனர். இங்குள்ள உய்யக்கொண்டான் திருமலையின் உயரம் 50 அடி. கோயிலைச் சுற்றி குடமுருட்டி, பொன்னொளி ஓடை, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக்கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. அருகில் உய்யக்கொண்டான் ஆறும் ஓடுகிறது. எப்படி செல்வது: திருச்சி - வயலுார் சாலையில் 5 கி.மீ.,(சோமரசம் பேட்டை அருகில்)