பதிவு செய்த நாள்
28
மார்
2022
01:03
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம் ஆகியவை செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி தினமும் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 8ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி தருமை ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து 10:10 மணிக்கு அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள், ராஜகோபுரங்கள் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 46 ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், தொண்டை மண்டலம் ஆதினம் 233 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் 29வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகர் ஆகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள், வடலூர் தவத்திரு ஊரன் அடிகள், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அறநிலையத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் மங்கையற்கரசி, புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன், மயிலாடுதுறை ராஜகுமார், டிஆர்ஓ முருகதாஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டதால் அனுமதி அட்டை இல்லாத பொதுமக்கள் கோவிலின் நான்கு வீதிகளில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். கும்பாபிஷேகம் முடிந்து திருக்கடையூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணி முறையாக மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.