பதிவு செய்த நாள்
07
ஜன
2011
05:01
இளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறென்ன...விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் நரேந்திரனோ...திருமணமா... உஹூம்.. என்றார். ஆனாலும், அவர் மனதில் குடும்பநிகழ்வுகள் ஊசலாடாமல் இல்லை. குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று தன் மனதிற்குள் ஒரு படம் வரைந்து பார்த்தார். இதெல்லாம் வேண்டாம்...சத்திய சொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும், அதற்கு இல்லறம் சரி வராது. ஒரே ஒரு காவிஆடையுடன் உலகம் முழுக்க சுற்றியேனும் கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்றும் ஒரு படம் போட்டார்.விஸ்வநாததத்தர் தன் மகனிடம், நரேன்! நான் இப்போது ஒரு பெரிய பணக்கார சம்பந்தம் பேசி முடிக்க இருக்கிறேன். அவர்கள் உன்னை ஐ.சி.எஸ்.படிக்க இங்கிலாந்துக்கு அனுப்ப பணம் தருகிறார்கள். இதுதவிர ஏராளமான வரதட்சணையும் தருகிறார்கள். பெண்ணும் பேரழகி. நீ படித்து கலெக்டராக வேண்டும். உன்னை இந்த ஊரே பார்க்க வர வேண்டும், என்றார் கண்களில் கனவலைகள் மிதக்க.நரேன் எப்படி இதற்கு ஒத்துக்கொள்வார்? இந்த கல்கத்தா நகரம் மட்டுமல்ல...இந்த உலகமே என்னை பார்க்க வரப்போகிறது? என்று எப்படி சொல்ல முடியும்? அவர் அமைதியாக மறுத்துவிட்டார்.இல்லை தந்தையே! திருமணம் என்ற பந்தத்துக்குள் என்னை தள்ளாதீர்கள். ஐ.சி.எஸ். என்ற படிப்பு வெறும் சம்பளத்தையும், அதிகாரத்தையும் தான் தரும். நான் ஞானம் என்ற பெரிய படிப்பைக் கற்றுக் கொள்ளப்போகிறேன். என்னை என் வழியில் விட்டு விடுங்கள், என்று சொல்லிவிட்டார். திருமணம் தொடர்பான நரேனின் பெற்றோர் விருப்பம் கானல்நீராகவே போய்விட்டது.
நரேந்திரன் கல்கத்தாவில் சிறந்து விளங்கிய பிரம்மசமாஜத்தில் சேர்ந்தார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவர் ராஜாராம் மோகன்ராய். அதன்பின் பலர் நிர்வாகம் செய்தனர். விவேகானந்தரின் காலத்தில் அதை ஆட்சி செய்தவர் தேவேந்திரநாத் தாகூர். இவர் யார் தெரியுமா? இந்த தேசம் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கிறதே ஜனகணமன என்ற தேசியப்பாடல். அதனை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் தந்தை. இந்த இயக்கம் இந்துமதத்தில் அதுவரை இருந்த சில மூடப்பழக்க வழக்கங்களை களைந்தெறிந்து புதிய பாதையில் நடைபோட்டது. பல தெய்வ வழிபாடு வேண்டாம். ஒரே தெய்வம் என்பது இதன் கொள்கை. கணவனை இழந்தபெண்கள் மீண்டும் திருமணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்த இயக்கம் எதிர்த்தது. இப்படிப்பட்ட முற்போக்கான கொள்கைகள் நரேந்திரனை ஈர்த்தன. எனவே தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்.ஒருமுறை நரேந்திரன் தேவேந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவனது மனதுக்குள் ஒரு தாகம்.எல்லோரும் கடவுளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவரை நேரில் பார்த்திருக்கிறார்களா? அப்படி யார் ஒருவர் பார்த்தாரோ அவரே எனது குரு. அவரிடம் இருந்து கடவுளைக்காணும் அந்த வித்தையை கற்பேன் என அடிக்கடி சொல்வார்.தேவேந்திரநாத்திடம் ஓடினார்.சுவாமி! தாங்கள் பிரம்ம சமாஜத்தின் மூத்த உறுப்பினர். தியானத்தில் கை தேர்ந்தவர். கடவுளின் கல்யாண குணங்களை பற்றி அதிகம் தெரிந்தவர். சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்னால் அவரைப் பார்க்க முடியுமா? அதற்காக நான் செய்ய வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.
தேவேந்திரநாத் தாகூர் அந்த இளைஞனின் கண்களை உற்று நோக்கினார்.மகனே! நீ சிறந்த யோகியாவாய், என்றார்.நரேந்திரனுக்கு இந்த பதில் எரிச்சலை அளித்தது. நான் கேட்டதற்கு இவரிடம் பதில் கிடைக்கவில்லை. அப்படியானால், இவர்களெல்லாம் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நாடகமாடுகிறார்களா? கருணையின் வடிவம் கடவுள் என்பதெல்லாம் போலியான வாதமா? அவர் சிந்தித்தார்.விவேகானந்தரிடம் இருந்து நம் நாட்டு குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. எவ்வளவு பெரிய மனிதர் தேவேந்திரநாத்! அவரிடம் இருந்து நேரடி பதில் கிடைக்கவில்லை என்றதும், விவேகானந்தர் எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் இளைஞர்கள் ஏற்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொல்வது சரிதானா என்று சிந்திக்க வேண்டும்.இளம் வயதில் தாத்தா, மரத்தில் பூதம் இருக்கிறது, பிசாசு இருக்கிறது என்று சொன்னதை அவர் எப்படி நம்பவில்லையோ, அதே போல வாலிபப்பருவத்திலும், தேவேந்திரநாத் தாகூர் சொன்ன எதிர்மறை பதிலை விவேகானந்தர் ஏற்கவில்லை. அப்படியானால் தேவேந்திரநாத் விபரம் தெரியாதவரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடும். இது அந்தப் பெரியவர் ஒருவர் விவேகானந்தருக்கு வைத்த டெஸ்ட் என்று சொல்லலாம்.மார்க் அட்டையுடன் வீட்டுக்கு வரும் மகன் அதிக மார்க் பெற்றிருந்தால் பெற்றவர்கள் உன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என பாராட்டும் போது குளிர்ந்து விடுகிறான். ஒரு அரசியல்வாதியை உம்மை விட சிறந்த நிர்வாகஸ்தர் யாருமில்லை என்றால், புகழ்ந்தவரை வாரியத்தலைவராக்கி விடுகிறார். புகழ்ச்சிக்கு மயங்காத உயிர்கள் இல்லை. நீ பெரிய யோகி என சொன்னவுடன் விவேகானந்தர் அந்த சொல்லில் மயங்கி, கடவுளைக் கண்டுவிட்டவர் போல நடிக்கப் போகிறாரா? அல்லது கடவுளைக் காணும் முயற்சியில் இறங்கப்போகிறாரா? என்று தேவேந்திரநாத் வைத்த தேர்வில் விவேகானந்தர் பாஸாகி விட்டார்.பின் அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் கேள்விக்கு பதிலளிக்காத பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பதே வீண் என நினைத்து, அதிலிருந்து விலகி விட்டார். அவரது தாகம் அதிகரித்தது. கடவுளைப் பார்த்தாக வேண்டும்... அவரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது அவரது நினைவில் வந்தார் பேராசிரியர் ஹேஸ்டி.