பதிவு செய்த நாள்
01
ஏப்
2022
10:04
காஞ்சிபுரம்: காஞ்சி தொண்டை மண்டல, 233வது ஆதீனம் திருசிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார், மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பழமையான மடங்களில், தொண்டை மண்டல ஆதீனம் மடமும் ஒன்று. இதன் 232வது ஆதீனமாக இருந்த ஞானபிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், ஓராண்டுக்கு முன், உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார். தொடர்ந்து, நடராஜன் என்பவர் 233வது திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியராக, 2021 மார்ச் 5ல் பொறுப்பேற்றார். மடத்தின் நிர்வாக குழு உறுப்பினராக ஐந்து பேர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைபடி மடம் இயங்குகிறது. இந்நிலையில் நிர்வாக குழு கமிட்டிக்கும், ஆதீனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக, கமிட்டிக்கு ஆதீனம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து, திருச்சிற்றம்பல தேசிக ஞானபிரகாச பரமாச்சாரியார் கூறியதாவது:
மடம் என்பது, அதன் வளர்ச்சியுடன் நில்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்; நான் அதன்படியே செயல்பட்டேன். மடத்திற்கு 89 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சில இடங்களில், சொத்துக்களுக்கு வாடகை நிர்ணயித்து வசூல் செய்தேன். மடத்தில் கட்டடங்கள், பூங்காவுக்கான கட்டுமான பணிகள் மேற்கொண்டேன். கொரோனா காலத்தில் 8,000 பேருக்கு, மடத்தின் சார்பில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.நித்யானந்தா சிஷ்யன் எனக்கூறி, மடத்தை கைப்பற்ற நினைத்த சந்தீப் என்பவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரை வெளியேற்றினேன். நான் செய்யும் பணி, நிர்வாக கமிட்டி குழுவிற்கு பிடிக்கவில்லை. அவர்களின் செயல்பாடு, மிரட்டல் விடுக்கும் விதமாக இருப்பதை உணர்ந்தேன். அதனால், கடந்த வாரம் நான் பொறுப்பு துறக்கும் கடிதத்தை, கமிட்டியிடம் கொடுத்தேன். இரு வாரத்திற்குள் மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர் குப்புசாமி கூறுகையில், உடல் நலம் கருதி, பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கடிதம் கொடுத்துள்ளார். ஏப்., 14க்கு பின்தான் முடிவு தெரியும். மடத்திற்கு சென்று, சுவாமியிடம் பேசிய பின், மற்ற விபரம் தெரிவிக்கிறோம், என்றார்.