செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதியுடன் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையன்று கோவில் முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கி பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர்.இரவு 12 மணிக்கு மேளதாளம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். நுாற்றுக்காணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இரவு 1 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவாக மகா தீபாராதனை நடந்தது. இதில் விழுப்புரம் கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கியதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.