பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
09:04
காஞ்சி சங்கரமடத்தில் கஜ பூஜை, கோ பூஜை விசேஷமாக நடக்கும். மடத்திலேயே இதற்காக பசுக்களும், யானைகளும் இருந்தன. இந்த பூஜைகளைத் தரிசித்து தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காகப் பக்தர்களும் திரளாக வந்து கூடுவர். 1930 ஜூலையில், ஆரணியை அடுத்த பூசைமலைக்குப்பம் என்னும் இடத்தில் இரண்டு மாதம் தங்கி சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிப்பெரியவர் மேற்கொண்டார். எந்த வித வசதியும் இல்லாத காட்டுப்பகுதியான அங்கும் கூட, பக்தர்கள் பெரியவரைத் தேடி வந்து தரிசித்தனர். காஞ்சிபுரம் மடத்தில் இருந்த யானையும், அங்கு கொண்டு வரப்பட்டு ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டது. அதனருகில் கீற்று வேயப்பட்ட கொட்டகைகள் இருந்தன. ஒருநாள் இரவு அதில் தீப்பற்றியது. நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் இதைக் கவனிக்கவில்லை. பக்கத்தில் கட்டப்பட்டிருந்த யானை தீயின் உஷ்ணம் தாங்காமல் சங்கிலியை அறுத்துக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டது. யானை ஓடிய தடயமும், கொட்டகை எரிந்து கிடப்பதையும் கண்ட மடத்து ஊழியர்கள் நடந்ததை யூகித்துக் கொண்டனர். நாலாபுறமும் காட்டுப்பகுதியில் யானையைத் தேடத் தொடங்கினர். ஆனால், யானை எங்கும் தென்படவில்லை. இரண்டு நாளுக்குப் பின் ஏழெட்டு கி.மீ., துõரத்தில் குளக்கரை ஒன்றில் யானை சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. பாகனுடன் மடத்து ஊழியர்கள் அந்த இடத்திற்குச் சென்றனர். எவ்வளவோ முயற்சித்தும், வணங்காமுடியான யானை அங்கிருந்து வர மறுத்தது. இதையறிந்த பெரியவர் நேரில் அங்கு சென்றார். அவரைக் கண்டதும் யானை துதிக்கையை வளைத்து எழுந்து நின்றது. அதன் உடலில் தீப்புண்கள் இருப்பதைக் கண்ட பெரியவர், அன்புடன் கைகளால் தடவிக் கொடுத்தார். கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். பாகனுக்கோ, யானையோடு பழகிய மற்றவர்களுக்கோ பணியாத யானை, பெரியவரின் அன்பான முகத்தையும், பாசத்தையும், உபசரிப்பையும் கண்டதும் பணிந்ததை அறிந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். (மகான் காஞ்சிப் பெரியவர்)