புண்ணிய காலங்களில் தானம் செய்வது அவசியம். முற்காலத்தில் அரசர்கள் முதல், மிராசுகள் மற்றும் செல்வந்தர்கள் எல்லோருமே சமுதாயத்தில் உள்ள எளியவருக்கும், கல்விமான்களுக்கும் வேதம், படித்தவர்களுக்கும் தானங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோன்று புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போதும், புனித நதிகளில் நீராடும்போதும் மற்றும் முன்னோர்களை நினைவு கூரும்போதும் தானங்கள் செய்ய வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அக்காலத்தில் பசு, பூமி, செல்வம், உணவு போன்றவற்றை தானமாகக் கொடுத்தனர். இளநீர் ஓட்டிலோ அல்லது பூசணிக்காயிலோ ஒரு துளை இட்டு அதில் முழுவதும் நவரத்தினங்களை நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாகக் கூட குறிப்புகள் உண்டு. இன்றைய காலக் கட்டத்தில் அவ்வாறு இயலுமா என்றால் இயலாது. அவரவர் தகுதிக்கேற்ப, தானம் பெற்றுக் கொள்பவருக்கு பயனுள்ள பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பதே தர்மம் ஆகும்.