பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
03:04
பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தகால் நடும் விழா நேற்று நடந்தது. தொடர்ந்து ஏப்ரல் 15 நள்ளிரவு கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.
மதுரை அழகர் கோவிலைப் போன்று பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 6:30 மணிக்கு கோயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது.
தொடர்ந்து ஏப்., 11 அன்று 9:00 மணி முதல் 10:15 மணிக்குள் கோடைத் திருநாள் என்னும் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. அன்று கும்பங்கள் புறப்பாடாகி, யாகமூர்த்தி யாகசாலையை சென்று அடைவார். அன்று முதல் ஏப்., 12, 13, 14 ஆகிய நாட்களில் காலை, மாலை யாக சாலை பூஜைகளும், இரவு பெருமாள் புறப்பாடு நடக்கும். ஏப்., 15 காலை 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பண்ண சுவாமிக்கு கும்பதிருமஞ்சனம் நடக்க உள்ளது. அன்று இரவு 1:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, கத்தி, வளரி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
ஏப்., 16 காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அழகருக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி விழா நடக்கிறது. அன்று மதியம் 2:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றில் அழகர் அருள்பாலிப்பார். ஏப்., 17 சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி, அன்று இரவு முழுவதும் விடிய, விடிய தசாவதார சேவையில் காட்சியளிக்கிறார். மேலும் ஏப்., 18 கருட வாகனம், 19ல் ராஜாங்க சேவை, ஏப்., 20 அன்று காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வீதிவலம் வந்து அன்று மாலை திருக் கோயிலை அடைகிறார். மறுநாட்களில் உற்சவ சாந்தி, பாலாபிஷேகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், டிரஸ்டிகள் பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.