பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
10:04
கோவை: கோவையில் நேற்று ரம்ஜான் நோன்பு துவங்கியது. இஸ்லாமிய சகோதரர்களின் ஐந்து பெரும் கடமைகளில் நோன்பு இருத்தல் முக்கியமான கடமையாகும். சூரியன் தோன்றுவதற்கு முன்பாக உணவு உட்கொண்டு விட்டு, பகல் முழுவதும்தண்ணீர் கூட குடிக்காமல், 30 நாட்கள் நோன்பு இருப்பது, ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும்.
நோன்பு நாட்களின் பலன்கள் மற்றும் சிறப்பு குறித்து மூத்த இஸ்லாமியர் சிலர் கூறியதாவது:உமர், கோவை ஏழு வயதிலிருந்து கடந்த, 50 ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறேன். நோன்பு நாட்களில் மனம் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறது. கோபம், வெறுப்பு, சங்கடங்கள் இருப்பதில்லை. கஷ்டங்கள் இருந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது. தொடர்ந்து நோன்பு இருப்பவர்களுக்கு, இறைவனின் பூரண அருள் கிடைக்கும்.
சையத் அபுதாகிர், கோவை கடந்த, 29 ஆண்டுகளாக நோன்பு கடைபிடித்து வருகிறேன். நோன்பின் முக்கிய நோக்கம், இறைவனுக்கு அஞ்சி இருப்பதாகும். இறைவனின் போதனைகளை கடைபிடித்து நடப்பதாகும். நோன்பு நாட்களில் பசியை முழுமையாக உணர முடிகிறது. தவறு செய்யும் எண்ணம் மனதில் தோன்றுவதில்லை. முக்கியமாக, அன்பும், மனித நேயமும் வளரும். சலீம், கரும்புக்கடை நான் கடந்த, 37 ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறேன். நோன்பு காலத்தில் இறைவனுக்கும் நமக்கும் தனியாக தொடர்பு ஏற்படுகிறது. இறைவனின் நேரடி பார்வையில் இருக்கிறோம்.எந்த தவறும், குற்றமும் செய்ய தோன்றாது. பொறுமை, தன்னடக்கம், நல்ல சிந்தனைகள் ஏற்படும். நோன்பு இருக்கும் நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ரஹீம், பள்ளி இமாம், போத்தனுார் நான் கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக நோன்பு இருந்து வருகிறேன். இதனால், இரக்க குணம், பிறருக்கு உதவும் எண்ணம், புலன் அடக்கம், ஒழுக்க சிந்தனை ஏற்படுகிறது. இறைவனின் அருளை முழுமையாக பெற, நோன்பு இருப்பதுதான் சிறந்த வழி. நோன்பு நாட்களில் உடலும், மனமும் துாய்மை அடைகிறது. இதனால் நான் வாழும் காலம் முழுவதும் நோன்பு கடைபிடிப்பேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே... அல்லா ஒருவரே துணை நமக்கு
மதுரை-எல்லா புகழும் இறைவனுக்கே... அல்லா ஒருவரே துணை நமக்கு... என அல்லாவின் பெயரை உச்சரித்து நோன்பு வைக்க துவங்கியுள்ள மதுரை இஸ்லாமியர்கள் நோன்பு வழிமுறைகள், அனுபவங்கள் குறித்து மனம் திறந்து சொல்கிறார்கள்.. 8 வயது முதல் நோன்புசிக்கந்தர், செய்தி தொடர்பாளர், எஸ்.டி.பி.ஐ.,: ஏப்.,2 பிறை தென்பட்டு நேற்று முதல் (ஏப்., 3) நோன்பு வைக்க துவங்கியுள்ளோம். அதிகாலை 4:30 மணிக்கு நோன்பு துவங்கும் வேளை இறைவனிடம் எங்கள் பாவங்களை மன்னித்து நோன்பை ஏற்றுக் கொள் என வேண்டுவோம். அதற்கு பின் உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க மாட்டோம். எச்சிலை கூட விழுங்க கூடாது. வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் தீய எண்ணம் , விருப்பு, வெறுப்புகளை தவிர்த்து கட்டுப்பாடாக இருப்போம். மாலை 6:35 மணிக்கு பேரீச்சம்பழம், கஞ்சி சாப்பிட்டு நோன்பு திறப்போம். பின் பள்ளிவாசலில் தராவிக் தொழுகை நடக்கும். 48 வயதாகும் நான் 8 வயது முதல் நோன்பு வைக்கிறேன்.
பசியை உணர்த்தும் நோன்பு ராஜ்கபூர், பொருளாளர், சுங்கம் பள்ளிவாசல்: பசியால் வாடும் ஏழை மக்களின் பசியின் உணர்வு நமக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் நோன்பு வைக்கிறோம். அல்லாவின் துாதுவரான நபிகள் நாயகம் (ஷல்) வழிகாட்டுதல்படி மிக கவனமாக நோன்பின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். 1443 ஆண்டுகளாக அனைத்து முஸ்லிம்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நோன்பு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். நான் உட்பட 22 குடும்ப உறுப்பினர்கள் நோன்பு வைக்கிறோம்.
இறைவனின் அருள் மட்டும் தெரியும்ஜமான், நிர்வாகி, காஜிமார் தெரு முஸ்லிம் ஜமாத்: 72 வயதான நான் 55 ஆண்டுகளாக இறை துாதுவரான நபிகள் நாயகம் கூறியுள்ள வார்த்தைகளின்படி நோன்பு வைக்கிறேன். உணவுக்கு வழியின்றி பசியால் துடிக்கும் ஏழை, எளிய மக்களின் கஷ்டம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று தான் நோன்பு வைக்கப்படுகிறது. பிற நாட்களில் 5 நிமிடம் சாப்பிட தாமதமானாலும் பசி கண்ணை கட்டும். நோன்பு நாட்களில் பசி, தாகம் என எந்த உணர்வும் தெரியாது. நடக்கும் பாதையில் உணவின் வாசம் வந்தால் கூட நுகராமல் கடந்து சென்று நோன்பின் மகத்துவம் காப்போம். எல்லாம் வல்ல இறைவனின் அருள் மட்டும் தான் கண்களுக்கும், மனதிற்கும் தெரியும்.
உண்மை, அன்பை போதிக்கும்சையது பாபு, பிரதிநிதி காந்திநகர் ஜமாத்: நான் 13 வயதில் இருந்து நோன்பிருந்து வருகிறேன். ரம்ஜான் மாதம், அருள் நிறைந்தது. இதில் நன்மைகள் அதிகம். இயற்கையாக மனிதனின் உள்ளம், உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி இதை ஒரே விதமாக கடைபிடிப்பர். இம்மாதத்தில் தீய நினைவுகள் வராது. நோன்பு காலத்தில் 5 முறை தொழுவதன் மூலம் உடற்பயிற்சியுடன், இறை நேரத்தை முழுவதும் உணர்ந்து மனதையும் துாய்மைப்படுத்திக் கொள்ளலாம். உண்மையும் அன்பையும் போதிப்பதை உறுதிப்படுத்தவே இந்நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. நோன்பு இருக்கும் காலங்களில் மனதில் தவறான எண்ணங்கள் வராது. பொதுவாக பள்ளி வாசலுக்கு என புறப்பட்டு வரும்போதே மனம் துாய்மையாகி விடும்.
மனதை துாய்மைப்படுத்தும்-ராஜா ஹசன், முன்னாள் ஐக்கிய ஜமாத் தலைவர்:நான் 30 ஆண்டுகளாக தொடர்ந்து நோன்பிருந்து வருகிறேன். காலை 4:00 மணிக்கு உணவு சாப்பிட்டு பகல் முழுவதும் எச்சில் கூட விழுங்காமல் மாலை 6:35 மணிக்கு நோன்பு திறப்போம். வெளி நாடுகளில் பழ உணவுகள் சாப்பிடுவர். இங்கு பேரீச்சை பழம் அதிகம் சாப்பிடுவர். பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இரவில் வணங்குவது தான் இந்த நோன்பின் சிறப்பு.
ஏழைகளின் பசியை போக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம். ஒவ்வொரு ஆண்டும் நோன்பு இருப்பதன் மூலம் நம் மனதையும், உடலையும் இறைவன் நல்வழிப்படுத்தி துாய்மைப்படுத்துவான். ஒரு நாளைக்கு 5 முறை பள்ளிவாசல் சென்று தொழுவது இறை நேரத்தை உணரக் கூடியதாகவும், மனதை துாய்மைப்படுத்தவும் சிறந்த நேரமாக உள்ளது. நான் இன்று நோன்பு வைத்துள்ளேன் என உறுதிமொழி (நியத்) எடுத்துக்கொண்டால் பசிக்காது. அதனை தாங்கக் கூடிய சக்தி இயற்கையாக கிடைக்கும். வியாதி இருந்தாலும் எந்த பிரச்னையும் வராது.
பாவங்களை சுட்டு எரிக்கும்-அமானுல்லா, செயலாளர், கோ. புதுார் முஸ்லிம் ஜமாத்: தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக நோன்பை கடைபிடித்து வருகிறேன். பசி என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதே இந்நோன்பின் தத்துவம். கூட்டுப் பொருளாதார தன்மையை இது ஏற்படுத்தும். இம்மாதங்களில் ஒவ்வொருவரும் மறக்காமல் நுாறு ரூபாய்க்கு இரண்டரை ரூபாய் ஜக்காத் வரி செலுத்த வேண்டும் என்பது நடைமுறை. இதில் கிடைக்கும் பணத்தை ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஜமாத்கள் மூலம் செலவிடப்படும். இம்மாதத்தில் எந்த தர்மம் செய்தாலும் இறைவன் நமக்கு 10 மடங்கு கூலி தருவார் என்பது நம்பிக்கை. ரமலான் என்றால் பாவங்களை சுட்டு எரித்தல் எனவும் பொருள்படும். இம்மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் புனிதமான மனிதர்களாக மாறுவர் என்பது நம்பிக்கை. இவ்வாறு நோன்பின் மகத்துவம் பற்றி தெரிவித்தனர்.
நற்குணங்களை மலரச் செய்யும் ரமலான் நோன்பு: திருப்பூர்-புனித ரமலான் நோன்பு நேற்று துவங்கியது. ரமலான் நோன்பின் மூலம் தெய்வீக அனுபவத்தை உணர முடியும் என்று இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
இஸ்லாமியருக்கு, ஐந்து வகை கடமைகள் இருப்பதாக, இஸ்லாம் மார்க்கம் தெரிவிக்கிறது. இதில், புனித ரமலான் நோன்பும் ஒன்று.கொரோனா ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலை திரும்பியுள்ள நேரத்தில், இந்தாண்டு ரம்ஜான் கொண்டாட்டம் களைகட்டப்போகிறது. நேற்று முதல், புனித ரமலான் நோன்பு துவங்கியுள்ளது. திருப்பூரில், நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், நேற்று மாலை, 6:35 மணிக்கு, இப்தார் நோன்பு திறந்து, தொழுகை நடத்தினர்.
டாக்டர் நசீர், முதுநிலை குடிமை மருத்துவர் (ஓய்வு), திருப்பூர்: பசியின் கொடுமையை, பணம் படைத்தவர் அறிந்துகொள்ள வேண்டுமென, ரம்ஜான் நோன்பு இருக்கிறோம். ஏழைகள், பசியை பழகிக்கொள்ளும் பயிற்சியாகவும் நோன்பு விதி உள்ளது. எனது வயது 66; 55 ஆண்டுகளாக, 30 நாட்களும் நோன்பு இருந்து வருகிறேன். ஒரு போதும், கடினமாக தோன்றியதில்லை. எனது நண்பர் வட்டத்தில், 75 ஆண்டுகளான முதியவர்களும் ரம்ஜான் நோன்பு இருக்கின்றனர். இதன் மூலம், தெய்வீக அனுபவத்தை உணர முடியும்.
ஜாகீர் அகமது, தலைவர், மஸ்ஜித் ஹஜ்ரத் பிலால் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்: உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்; ஏழைகளின் உணர்வுகளை உணர வேண்டும் என்பதற்காக, 30 நாட்கள் நோன்பு இருந்து புனித ரமலானை கொண்டாடுகிறோம். காலை, 4:53 மணி முதல், மாலை, 6:35 வரை தண்ணீர் கூட குடிக்க மாட்டோம். மாலைக்கு பிறகு, கஞ்சி பருகுகிறோம். எனக்கு, 62 வயது ஆகிறது; ஐந்து வயதில் இருந்தே நோன்பு கடைபிடித்து வருகிறேன். நோன்பின் பயன் சிறப்பானது.
சுலைமான், காங்கயம் ரோடு, திருப்பூர்:இஸ்லாமியரின் முக்கியமான பண்டிகை ரம்ஜான்; பண்டிகையை கொண்டாடும் முன், 30 நாட்கள் நோன்பு இருக்கிறோம். இரவில் மட்டும் கஞ்சி, பேரீச்சை மற்றும் பழங்கள் சாப்பிடலாம். பகலில் தண்ணீர் கூட அருந்த மாட்டோம். கோபம், வாக்குவாதம் செய்யாமல், இறைவனை நினைத்து நோன்பு இருக்கிறோம். நோன்பு, நம்மிடம் உள்ள நற்குணங்களை மலரச்செய்கிறது.
ஹக்கீம், துணைச்செயலாளர், காங்கயம் ரோடு பள்ளிவாசல்:ரம்ஜான் நோன்பை, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, அனைவரும் கடைபிடிக்கிறோம். மொத்தம், 14 மணி நேரம் வரை, ஆகாரமின்றி இருப்பதால், ஜீரண உறுப்புகள் ஓய்வெடுக்கின்றன; ஆரோக்கியம் கூடுகிறது. முன்னோர்கள் கூறியுள்ளபடி, கடுமையாக நோன்பு விதிமுறைகளை கடைபிடிக்கிறோம்.
ஹாஜி முகமது ரபீக் முத்தவல்லி, திருப்பூர்:ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், நோன்பு இருக்கிறோம். உடல்பலம் அதிகரிப்பது, அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கூட ஆர்வமாக நோன்பு இருக்கின்றனர்.ஏழைகளுக்கு உதவுதல், உணவு, தண்ணீரை வீணடிக்காமல் இருப்பது, ஒழுக்க நெறி போன்றவற்றை கற்கின்றனர். பகலில் விரதம் இருப்பதால், இரவில், கஞ்சி போன்ற ஆகாரத்தை மட்டுமே பருகுகிறோம்.
பிறை பார்த்து ரம்ஜான் நோன்பு துவக்கம்
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர்.உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மக்கள் நேற்று முதல், ரம்ஜான் நோன்பை துவக்கினர். ரம்ஜான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். முதல் நாளான நேற்று இரவு, பிறை பார்த்து சிறப்பு தொழுகை நடந்தது.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. சிறுவர்கள் முதல் முதியோர் வரையில், அனைத்து வயதினரும், தொழுகையில் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலக்காடு ரோடு, பெரிய பள்ளிவாசலில், சுன்னத் ஜமாத் தக்னி ஜாமியா மஸ்ஜித், முத்தவல்லி ஹாஜி ஜனாப் ஜாஹிர் உசேன் தலைமையில் தொழுகை நடந்தது. செயலாளர் ஹாஜி ஜனாப் அன்வர் பாஷா, பொருளாளர் ஜனாப் முஸ்தாக் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முத்தவல்லி ஹாஜி ஜனாப் ஜாஹிர் உசேன், 70, கூறியதாவது:நோன்பு வைத்திருப்பவர்கள் அதிகாலை, 4:00 மணிக்கு (ஸஹார்) உணவு உட்கொண்டு, மாலை, 5:15 வரையில், குடிநீர் கூட அருந்தாமல் கடுமையான விரதத்தை கடைபிடிக்கின்றனர். அதிகாலையில் நோன்பு வைப்போருக்கு உணவு வழங்க, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், பல ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. மாலையில் தொழுகைக்கு வருவோருக்கு, பச்சரிசி, காய்கறிகள் அடங்கிய கஞ்சி, புதினா சட்னி மற்றும் பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன. ஐந்து கடமைகளுள் ஒன்றான, நோன்பு வைப்பதால், ஒருவர் பல நன்மைகளை அடைகின்றனர்.மருத்துவ ரீதியில் பார்த்தால், உடல் உறுப்புகளுக்கு பல மணி நேரம் ஓய்வு கொடுத்து, பின் ஆரோக்கிய உணவு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.உடல் நிலை சரியில்லாதோர், முதியோர் என, நோன்பு வைக்க முடியாதோர், தானம் வழங்குவது வாயிலாக நன்மைகளை பெறுகின்றனர்.
இந்தாண்டு, தமிழக அரசு, பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசியின் அளவை குறைத்துள்ளனர். ஏற்கனவே வழங்கிய அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.
வால்பாறை: ரம்ஜான் மாதத்தில் தான் குர்ஆன் எனும் வேதம் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது. ரம்ஜான் நோன்பின் முதல் நாளான நேற்று, வால்பாறை புதுமார்க்கெட்டில் உள்ள பள்ளிவாசலில் மாலை, 6:37 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.முன்னதாக பள்ளிவாசலில் இஸ்லாமியருக்கு இப்தார் விருந்து (நோன்பு கஞ்சி) வழங்கப்பட்டது.
வால்பாறையை சுற்றியுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.வால்பாறையில் மூத்த இஸ்லாமியர் சையது இப்ராஹிம் கூறுகையில், ரம்ஜான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது அவசியம். இன்னல்களை போக்க, இறைவனை நாள்தோறும் ஐந்து முறை தொழுக வேண்டும். இறைவன் அருள் பெற நோன்பு கஞ்சி குடிப்பது அவசியம். இந்த புனித மாதத்தில் இறைவனில் அருள் பெற வேண்டுமெனில் நோன்பு இருப்பது அவசியம், என்றார்.
உடுமலை: ரம்ஜான் மாதத்தில், இஸ்லாமியர்கள், இறைவனின் அருள் பெற நோன்பு இருக்கின்றனர். நேற்று மாலை, ரம்ஜான் நோன்பு துவக்கும் நிகழ்ச்சி, உடுமலை பூர்வீக பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில், சிறப்பு தொழுகையுடன் துவங்கியது.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ரம்ஜான் நோன்பு குறித்து பூர்வீக பள்ளிவாசல் பேஷ் இமார் சையித் ஈசா பைஜி கூறியதாவது:ஒவ்வொரு வினாடியும் இறைவனை மறவாமல் நினைக்க, ரம்ஜான் நோன்பு உதவுகிறது. நோன்பு காலத்தில், தாகமும், பசியும் ஏற்படும் போதெல்லாம், இறைவனை நினைக்கிறோம்; அவர் காட்டிய வழியை பின்பற்றுகிறோம்.
இத்தகைய நோன்பு மனிதர்களுக்கு இறை அச்சத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும்.எல்லா காரியங்களும் சீராக நடக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க ரம்ஜான் மாதத்துக்கும், நோன்புக்கும் உள்ளது. கடந்த, 52 ஆண்டுகளாக, ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகிறேன். இவ்வாறு, தெரிவித்தார்.