கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 08:04
நாகர்கோவில்: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நேற்று 1098 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை நிறைவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையில் அமைந்துள்ள கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் துாக்க திருவிழா கடந்த 26–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாள் விழாவான நேற்று குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை நிறைவு செய்யும் துாக்கத்திருவிழா நடைபெற்றது. தேர் போன்ற சக்கர வண்டியில் நான்கு துாக்க மரங்கள் நிறுவப்பட்டு, அதன் மேற் பகுதியில் துாக்க வில் அமைக்கப்பட்டு அதில் துாக்ககாரர்கள் கையில் குழந்தையுடன் தொங்கிய படி கோயிலை வலம் வருவது இதன் சிறப்பு. குழந்தை பிறப்பதற்காகவும், நோய் நொடியின்றி வாழவும் வேண்டி பெற்றோர் தேவியிடம் இந்த வேண்டுதலை வைத்து நிறைவேற்றுகின்றனர். நேற்று 1098 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இன்று அதிகாலை வரையிலும் நடைபெற்றது. துாக்க நேர்ச்சை முடிந்ததும் குருதி தர்ப்பணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.