பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
05:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்புச்சிபாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மயான கொள்ளை சிறப்பு பூஜை மயான பள்ளத்தில் நடந்தது. அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த பூத உருவத்துக்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், பூசாரி சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து குண்டத்து கரகங்களை பம்பை, உடுக்கை ஆட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாலை, 7:00 மணிக்கு அம்மன் அழைப்பு நடந்தது. பின்னர், 32 அடி நீளமுள்ள குண்டம் திறக்கப்பட்டு, விறகுகள் அடுக்கி தீ வளர்க்கப்பட்டன. தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் அழைத்து வரப்பட்டன. காலை, 8:00 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், பக்தர்கள் பலர் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற குண்டம் இறங்கினர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.