பதிவு செய்த நாள்
05
ஏப்
2022
08:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி முடங்கி கிடப்பதால், பணத்தை பறி கொடுக்கும் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் கோயிலில் தரிசிப்பார்கள். இதனால் அக்னி தீர்த்த கரையில் தினமும் ஏராளமான பக்தர்கள் திரள்வார்கள். இச்சூழலை பயன்படுத்தி பக்தர்களிடம் நூதன முறையில் திருடர்கள் பலமுறை பணம், மொபைல்போனை திருடி செல்கின்றனர். இவர்களை பிடிக்க முடியாமல் திணறிய போலீசார், 2015ல் அக்னி தீர்த்த கரையில் போலீசார் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல் உதவி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலப்போக்கில் கேமராவை பராமரிக்காததால் பழுதாகியும், இங்கிருந்த காவல் உதவி மையம் பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக திருடர்கள் கைவரிசை ஓங்கியதால், பல ஆயிரம் ரொக்க பணம், மொபைல்போனை பக்தர்கள் தொடர்ந்து பறிகொடுக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பலே திருடர்களை பிடிக்க, பழுதான கேமராக்களை புதுப்பித்து, போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த எஸ்.பி., கார்த்திக் உத்திரவிட வேண்டும்.