பதிவு செய்த நாள்
05
ஏப்
2022
10:04
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் பிரசாத விவகாரத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. அக்கோவிலில் வழங்கும் பிரசாதம் தரமானது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது, என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறநிலையத்துறை அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து, இணை, துணை கமிஷனர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் அவர் அளித்த பேட்டி:
கோவில்கள் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்குத் தேவையானபயிற்சிகள் வழங்கப்படும். கோவில்களின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட கையேடு வெளிடப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள், 1,500 பேர் பணிவரன்முறை செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடந்தது. சென்னை, பழநி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் துவக்க ஆலோசிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் இடத்தில் குடியிருப்பு, வணிகக் கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இது இல்லாமல், பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடபழநி ஆண்டவர் கோவில் பிரசாதம் விவகாரத்தில், எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. அங்கு வழங்கும் பிரசாதம் மிகவும் தரமானது. இது குறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.