தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் : நேர்த்திக்கடன் செலுத்த குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 12:04
தாயமங்கலம் : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வந்த வண்ணம் உள்ளனர்.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் 10 நாட்கள் நடைபெறும். விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிக்காணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி இரவு 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் துவங்கினர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று நடைபெறுவதை யொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தாயமங்கலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.நாளை 6ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு மின் விளக்கு அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.