பதிவு செய்த நாள்
05
ஏப்
2022
02:04
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் ரம்ஜான் நோன்பு துவங்கியது. அல்லாவின் பெயரை சொல்லி நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு, அல்லாவே நேரடியாக நற்பலன்களை தருவதாக கூறுகின்றனர். சூரிய உதயத்திற்கு முன் உணவு உட்கொண்டு, நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல், 30 நாட்கள் நோன்பிருப்பது குறித்து, இஸ்லாமியர் சிலர் கூறியதாவது:
நசீர் அஹமது, 40,(முப்தி) ரசூல் மஜீத், கிருஷ்ணகிரி: முஸ்லிம்களின் ஐந்து முக்கிய கடமைகளில், மூன்றாவது கடமை நோன்பு. ரமலான் மாதத்தில், பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சொர்க்கத்தின் ரையான் எனும் கதவு திறக்கப்படுகிறது. இறைவனே நேரடியாக இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதே இதன் முக்கிய பலன். கடந்த, 30 ஆண்டுகளாக இறைவனை நினைத்து நோன்பு இருப்பதால், தண்ணீர் தாகமோ, பசியோ எங்களுக்கு தெரிவதில்லை. நோன்பால் உடல்நலம் மேம்படும்.
முகம்மது ஷபி, 67, கிருஷ்ணகிரி: நான், 15 வயதிலிருந்து தொடர்ந்து, 52 ஆண்டாக நோன்பிருந்து வருகிறேன். நோன்பு காலத்தில் ஏற்படும் மனநிம்மதி மற்ற காலங்களில் ஏற்படுவதில்லை. இச்சமயத்தில் அல்லாவிடம் கேட்கும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும். சிறிய தொழிலை துவக்கிய நான், நோன்பு தவறாமல் இருந்து வருவதால்தான், தொழிலில் வளர்ச்சி பெற்று, பல நல்ல பணிகளை செய்து வருகிறேன். கோடீஸ்வரர் முதல், ஏழை வரை, ஒரே இடத்தில் ஒரே வகையான நோன்பு கஞ்சியை குடித்து நோன்பு கடைப்பிடிப்பதே, இஸ்லாமிய மதத்தின் சிறப்பு.
டாக்டர். இஸ்மாயில் மாலிக், 42, கிருஷ்ணகிரி: நான் என், 7 வயது முதல் தொடர்ந்து ரம்ஜான் நோன்பு இருக்கிறேன். இஸ்லாமியராகவும், மருத்துவராகவும் நான் கூறுவது, நோன்பு இருப்பதால் உடம்பில், டாக்சின்ஸ் எனப்படும் தேவையற்ற அமிலப்பொருட்கள் வெளியேற்றப்படும், தேவையற்ற கொழுப்புகள் குறையும், உடம்பில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல இறையாண்மை அதிகரிக்கும். தவறான எண்ணங்கள் நீங்கி வேலை, தொழிலில் அக்கறை ஏற்பட்டு, முன்னேற்ற பாதையில் நம்மை வழிநடத்தும்.
பாபு, 68, முத்தவல்லி, டேக்கீஸ்பேட்டை பள்ளிவாசல்: ரம்ஜான் மாதம் பெரிதும் புண்ணிய மாதம். நாட்டு மக்களின் துயரை போக்க வேண்டும். ஏழைகள் இல்லாத உலகம் அமைய அல்லாவை வேண்டுகிறோம். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாட்டை அகற்றி, ஒற்றுமையை வளர்க்க, அல்லாவின் பெயரில் ரம்ஜான் மாதத்தில் உதவிகளை செய்து வருகிறோம். கடந்த, 60 ஆண்டுகளாக நோன்பு எடுக்கிறேன். ரம்ஜான் நோன்பில் உள்ள வழி காட்டுதல்கள், மத பேதமின்றி சிறந்தவை.
சவுகத் அலி, 60, தர்மபுரி: ரம்ஜான் நோன்பு, ஏழைகளில் கஷ்டத்தை உணர்ந்து, வசதி படைத்தவர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னதமான கொள்கை கொண்டது. அல்லாவின் பெயரால், இதை அனைத்து இஸ்லாமிய மக்களும், மதபேதமின்றி ரம்ஜான் காலத்தில் கடைப்பிடிக்கின்றனர். நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும், நலமுடன் வாழ தொழுகையில் ஈடுபடுகிறோம். கடந்த, 52 ஆண்டுகளாக நோன்பை கடைப்பிடிக்கிறேன்.
ஹஜ்ரத் மவுலானா நவ்ஷாத் அஹ்மத்ஹஸ்னாதி, 41, தர்மபுரி: அல்லாவின் பெயரில், நபிகள் நாயகம் அறிவுறுத்தியபடி, இஸ்லாமிய மக்கள் காலை, 4:30 முதல் மாலை, 6:00 மணி வரை நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு காலங்களில் தீயவற்றை பார்ப்பது, கேட்பதை தவிர்ப்பதுடன் நோன்பு காலத்தில் உணவை தவிர்க்கின்றனர். இதனால், மனம் மட்டுமின்றி உடலும் துாய்மையாகிறது. அனைவருக்காவும் தொழுவதுடன், இல்லாதவர்களை நமக்கு சமமாக உயர்த்தும் பணியில் ஈடுபடுவதை, நோன்பு காலத்தில் எங்களது முக்கிய பணியாக செய்கிறோம்.