பதிவு செய்த நாள்
06
ஏப்
2022
12:04
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏப்., 4 இரவு அனுக்கை மற்றும் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு தங்க கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி தனித்தனியாக சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி வலம் வந்தார். தொடர்ந்து கற்பகத்தரு, கிளி, குதிரை, கைலாசவாகனம், காமதேனு, வெள்ளி ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்ன வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி வலம் வருவர். ஏப்., 12ல் பிச்சாண்டவர் புஷ்பா சப்பரத்திலும், மறுநாள் விசாலாட்சி அம்மையுடன் சந்திரசேகர் விதிவலம் வருவதுடன், திருக்கல்யாண மண்டபத்தில் திருமண சீர் வரிசை வைக்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்., 14 அன்று மாலை 6:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மறுநாள் காலை 8:00 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கிறது.