பதிவு செய்த நாள்
06
ஏப்
2022
12:04
ஆத்தூர்: உலகில் உயரமான (146 அடி) முத்துமலை முருகன் கோவிலில், இன்று (ஏப்.,6) காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன், 78. இவர், 2015ல், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, 60 ஏக்கர் நிலம் வாங்கி, 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்தார். அதே இடத்தில், 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் (உயரம் 140 அடி) சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, மலேசியாவில் முருகன் சிலை வடிவமைத்த, திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன், 50, என்பவரை அழைத்து வந்து, உலகில் உயரமான முருகன் சிலையை, 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்து, 2016 செப்., 6ல் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கினார்.
2018ல், முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர், 50, வசந்தராஜன், 55, ஞானவேல், 52, மகள் பத்மாவதி, 50, உள்ளிட்ட குடும்பத்தினர், முருகன் சிலை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கு, 146 அடி உயர முத்துமலை முருகன் சுவாமி, மஹா கணபதி உள்ளிட்ட அறுபடை முருகன் ஆகிய சன்னதிகளில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.