பதிவு செய்த நாள்
06
ஏப்
2022
04:04
சென்னை:திண்டிவனத்தை அடுத்த பஞ்சவடி ஷேத்திரத்தில் ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. திண்டிவனம்- - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, மத்திய திருப்பதி எனும் பஞ்சவடி ஷேத்திரம். அங்கு ஆண்டுதோறும் ராம நவமி மகோற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ராம நவமி மகோற்சவம்,வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து, பஞ்சமுகஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவரும், நிர்வாக அறங்காவலருமான கோதண்டராமன் கூறியதாவது:ராம நவமியை முன்னிட்டு, பூர்வாங்க பூஜைகள் இன்று துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. நாளை முதல் 10ம் தேதி வரை காலை, மாலை இரு வேளையும் லட்சார்ச்சனை நடக்கும். 10ம் தேதி காலை 8:45 மணிக்கு ராம நவமி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி, 36 அடி விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு, 2,500 லிட்டர் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. பூர்ணாஹுதிக்கு பின் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடக்கும். பின், விேசஷ திருமஞ்சனம், அலங்காரம், புஷ்பவிருஷ்டி, திருவாராதனம், சாற்றுமுறை நடந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். மாலை 4:30 மணிக்கு சீதா-ராம திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் அறங்காவலர்கள் செய்துவருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.