சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திரசேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது எலுமினியன் கோட்டூர் என்று அழைக்கப்படுகிறது. தேவலோக மங்கையர் வழிபாடு செய்த சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக இங்கு விளங்குகிறார். 16பட்டைகளுடன் இவர் இருப்பது சிறப்பு. இங்கிருக்கும் தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவருடைய கைகள் காட்டும் சின்முத்திரையை, வழக்கத்திற்கு மாறாக, தன் இதய கமலத்தில் நிறுத்தியிருப்பது மாறுபட்ட அமைப்பாகும். கண்கள் இரண்டும் கீழ்நோக்கி பக்தர்களைப் பரிவுடன் பார்ப்பது போல உள்ளது. வலக்கரத்தில் சூலமும், இடக்கரத்தில் ருத்ராட்ச மாலையும் உள்ளன. மற்றொரு இடக்கரம் கீழே உள்ள பீடத்தின்மீது ஊன்றிய நிலையில் உள்ளது. வலப்பாதம் மேல்நோக்கியபடி யோகநிலையிலும், இடப்பாதம் முயலகன் மீது ஊன்றியபடியும் காட்சி தருகிறார். தொடர்ந்து மூன்று வியாழக்கிழமை இவரைத் தரிசிக்க நன்மை உண்டாகும். 21முறை இக் கோயிலை வலம் வந்தால் எண்ணிய செயல்கள் ஈடேறும். அம்மன் கனககுஜாம்பாள் எனப்படுகிறாள். மல்லிகைச் செடி தலவிருட்சம். திருஞானசம்பந்தர் இப்பெருமான் மீது 11 பாடல்கள் பாடியுள்ளார். கோயிலுக்குரிய சந்திரதீர்த்தம் கோயிலுக்குத் தெற்கே அமைந்துள்ளது. மாசிமாதத்தில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. மாசியில் இங்கு கிளம்ப தயாராகலாமே! கோயம்பேட்டில் இருந்து 143 பி பஸ்சிலும், காஞ்சிபுரத்தில் இருந்து டவுன் பஸ்களிலும் எலுமினியன் கோட்டூர் செல்லலாம்.