ஹைதராபாத் நகரின் மையத்தில் அமைந்துள்ளது அனுமன் கோயில். இங்கு அனுமன் கர்ப்பகிருகத்தினுள் வெள்ளிக் கவசத்துடன் செந்தூரக் காப்பில் வித்தியாசமான வடிவில் காட்சி அளிக்கிறார். பிராகாரத்தில் மற்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வெளியே நவகிரக சன்னதியும் காணப்படுகிறது. ஒருமுறை காட்டில் வீராவேசமாக மன்னன் ஒற்றை ஆளாக வேட்டையாடிக் கொண்டிந்தான். பாய்ந்து வந்த சிறுத்தைகளையும் புலிகளையும் தன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிக் கொன்றான். ஏராளமான விலங்குகளை நீண்ட நேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னனும், மற்றவர்களும் அந்த வனத்தின் மற்றொரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் மன்னனின் மனம் ஒரு வித்தியாசத்தை உணரத் தொடங்கியது. அவன் மனம் இலகுவாகியது. மனதில் இருந்த கொலை வெறி அடங்கியது. சன்னமாக ஒலித்த ஏதோ ஒரு வார்த்தை அல்லது மந்திரம். காற்றின் வழியே ஊடுருவி வந்து அவன் செவிக்குள் நுழைந்து அவனை சாந்தம் கொள்ள வைத்தது. இனம்புரியாத அந்த அமைதி தனக்குள் குடி புகுந்தது எப்படி? எங்கிருந்து வருகிறது இந்த இனிய ஒலி? என்று தேடத் தொடங்கிய அரசன், அருகில் இருந்த ஒரு புதரை நீக்கினான். அடுத்த நிமிடம் அவன் மேனி சிலிர்த்தது, தேகம் லேசாக நடுங்கியது. அங்கே அவன் கண்ட அதிசயத்தால் அவன் சுவாசம்கூட ஒரு சில நொடி நின்று தொடர்ந்தது. அந்தப் புதருக்கு நடுவே தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தது ஓர் அனுமன் சிலை. அதில் இருந்துதான் வந்து கொண்டிருந்தது அந்த மந்திர ஒலி. அது தாரக மந்திரம், ஆம் ராம்... ராம்...! என்ற மந்திரம்தான் அது. ராமதூதனின் சிலை... தப்புத் தப்பு! அனுமன் தன் அம்சத்தையே சிலையில் நிறைந்திருப்பதை உணர்ந்தான் வேந்தன். அதிசயமான அந்த அனுமன் சிலையை அங்கேயே ஓர் ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்தான். அந்த மன்னன், காகதீய வம்சத்தில் வந்தவன். அவன் ஆலயம் கட்டியது பதினோராம் நூற்றாண்டில். அப்போதிலிருந்து இன்றும் அதே தலத்தில் தன் கருணையும் ராம நாம ஈடுபாடும் சற்றும் குறையாமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் அனுமன்.