பதிவு செய்த நாள்
11
ஏப்
2022
01:04
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வெங்கட்டம்பட்டி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. காலை, 9:00 முதல், 10:00 மணி வரை பட்டாபிராமருக்கு ஜனன ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து சீர்வரிசை எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. 10:30 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை, 9:30க்கு, சீதா ராமருக்கு சிறப்பு அபிஷேகம், நாளை காலை, 6:00 மணிக்கு மேல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதே போன்று, தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் சுவாமி கோவில் முன்புள்ள திருமண மண்டபத்தில் ராமர்- சீதா திருக்கல்யாணம் நடந்தது.
* கெலமங்கலம் அடுத்த ஒசபுரத்திலுள்ள, 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தேன்கனிக்கோட்டையிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடந்தது.
* அரூர் கடைவீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நேற்று, சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
* ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி, பட்டக்கானுார், பெருமாள்குப்பம் ஆகிய கிராமங்கள் இணைந்து நடத்திய, 73ம் ஆண்டு, ஸ்ரீராம நவமி தேர் திருவிழா நேற்று நடந்தது. படப்பள்ளியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திம்மராய பெருமாள் கோவிலில் நேற்று, திம்மராய சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதேபோல் ஊத்தங்கரை, ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியையொட்டி ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு பின், சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்தது.