சுட்டெரிக்கும் வெயில் : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 02:04
ராமேஸ்வரம்: சுட்டெரிக்கும் வெயிலில் ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் நிழல் பந்தல் இல்லாமல், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் சன்னதி தெரு, கிழக்கு, வடக்கு ரதவீதி வழியாக கோயிலுக்குள் சென்று 22 தீர்த்தங்களை நீராடிய பின் தரிசிக்கின்றனர். பக்தர்கள் நீராட, கோயிலில் தரிசித்த பின் சொந்த ஊர் செல்ல நான்கு ரதவீதியை கடந்து தான் செல்ல முடியும். இந்நிலையில் தற்போதைய கோடையினால் ராமேஸ்வரம் பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ரதவீதியில் இளைப்பாறவும், ஒதுங்கி நிற்க நிழல்தரும் பந்தல் இன்றி, பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.2016ல் அப்போதைய கோயில் இணை ஆணையர் செல்வராஜ், பக்தர்கள் நலன் கருதி ரதவீதியில் நிழல்தரும் பந்தல் அமைத்த நிலையில், தற்போதைய கோயில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.