சாதாரண மனிதர்களாகப் பிறந்து வாழ்வின் உண்மையான உண்மையைத் தேடி அலைந்து உணர்ந்து ஞானிகளாக, மகான்களாக, யோகிகளாகப் பரிணமித்து நிற்பவர்கள் சித்தர்கள். தங்கள் அனுபவங்களாலும் சிந்தனை செயல்களாலும் மனித குலம் உய்யப் பல மகத்தான உண்மைகளை உபதேசித்த அவர்கள், தம்மை வழிபடுவோரின் இன்னல்களைத் தீர்த்து வைத்து நல்வழி காட்டுகின்றனர். ஆன்ம நலத்தைப் போதித்து உயர்த்துகின்றனர்.
சித்தர்களில் பல வகையினர் உண்டு. பல தரப்பினர் உண்டு. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். இவர்களில் ஒரே நேரத்தில், பல இடங்களில், பல நபர்களுக்குக் காட்சி தந்த சித்தர்கள் முதல் வானத்தில் பறந்த சித்தர்கள் வரை பலர் உண்டு.