பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
10:04
பசுவின் உடம்பில் சகல தெய்வங்களும் இருக்கின்றனர். முக்கியமாக மகாலட்சுமி அதன் பின்புறத்தில் வசிக்கிறாள். பசுவைக் கண்டாலும், தொட்டு வணங்கினாலும் பாவம் தீரும். புனிதமான பசு இனத்தைச் சேர்ந்த காமதேனு வழிபட்ட சிவன், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் உள்ளார். இவரை தரிசித்தால் கோடி புண்ணியம் சேரும்.
ஒருநாள் தேவலோகத்தில் இந்திர சபை கூடியது. காமதேனுவைத் தவிர மற்றவர்கள் வந்து விட்ட நிலையில் கோபம் அடைந்த இந்திரன், ‘‘ தாமதமாக வந்த நீ பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறக்கக் கடவது’’ எனச் சாபமிட்டார். காட்டுப்பசுவாக பிறந்த அது காதுகளில் தீர்த்தம் எடுத்து வந்து தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்தது. ‘காது’ என்பதை ‘கர்ணம்’ என்றும், பசு என்பதை ‘கோ’ என்றும் சொல்வர். இதனால் இத்தலம் ‘கோ கர்ணம்’ எனப்பட்டது.
பசுவை சோதிக்க விரும்பிய சிவன், ஒருமுறை காட்டுவழியில் புலி வடிவில் தோன்றி தடுத்தார். ‘‘ சிவனை தரிசிக்கச் செல்லும் என்னை தடுக்காதே! பூஜை முடித்து வந்ததும் உனக்கு இரையாகிறேன். சிவன் மீது சத்தியம்’’ என்றது. புலியும் சம்மதிக்கவே பசு புறப்பட்டது. வாக்கை நிறைவேற்ற சிறிது நேரத்திலேயே பசு திரும்பி வந்தது. மகிழ்ந்த சிவன், தனது புலி வடிவத்தை மறைத்து சிவலிங்கமாக காட்சியளித்தார். இவரே ‘கோகர்ணேஸ்வரர்’ என்னும் பெயரில் இங்கு இருக்கிறார். பிற்காலத்தில் பிரகதாம்பாள் அம்மனுக்கு சன்னதி எழுப்பப்பட்டது.
மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட குகைக்கோயில் இது. நுழைவு வாசல் தெற்கு நோக்கியும், சன்னதிகள் கிழக்கு நோக்கியும் உள்ளன. விநாயகர் சன்னதியை அடுத்த மண்டபத்தில் காமதேனுவின் சிவபூஜை, ராமாயண சம்பவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. நாயன்மார் சன்னதியில் ரிஷப வாகன சிவனைத் தரிசிக்கலாம். மகிழவனேஸ்வரர், மங்கள நாயகி, நடராஜர், தட்சிணாமூர்த்திக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து 3 கி.மீ.,