அரசர் ஒருவர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இருந்தாலும் தனக்கு அடுத்து பொறுப்பை கவனிப்பவர் யாருமே இல்லை என வருத்தப்பட்டார். எனவே அமைச்சர் ஒருவரை நியமிக்க, போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த பதவிக்கு தகுதியான ஐந்து நபர்கள் இருந்தனர். போட்டிற்கு முந்தைய நாள் அவர்களை அழைத்து, ‘‘என்னிடம் கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட பூட்டு உள்ளது. நாளை யார் இந்த பூட்டை குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவேர முதலமைச்சர்’’ என அறிவித்தார். இப்படி அரசர் சொல்லி முடிப்பதற்குள் ஐவரும் சிட்டாக பறந்தனர். நாளை தேர்வு எனும்போது யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. அந்த ஐவரில் ஒருவரைத்தவிர மற்றவர்கள், இரவு முழுவதும் கணிதம் பற்றிய குறிப்புகளை சேகரித்துக் கொண்டே இருந்தனர். நேரம் ஓடியது. குறிப்புகள் மூலையில் சேர்ந்ததே தவிரை, மூளைக்குள் சேரவில்லை. ஆனால் அந்த ஒருவர் தனக்கு கிடைத்த ஒரு குறிப்பை மட்டும் படித்து, துாங்க சென்றார். மறுநாள் காலை அரசவை கூடியது. பிரம்மாண்டமான பூட்டு ஐவரின் முன்பு வைக்கப்பட்டது. துாக்கமே இல்லாத அந்த நால்வரது மூளை அப்போது துாங்கச் சென்றது. இப்படி மனம் ஒருநிலையில் இல்லாததால், எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் பூட்டை திறக்க முடியவில்லை. கடைசியாக நன்றாக துாங்கிய அந்த நபர் மேடைக்கு வந்தார். சில வினாடிகளிலேயே பூட்டைத்திறந்தார். காரணம் பூட்டு பூட்டப்படவேயில்லை. அதை கண்டுபிடித்ததால் வெற்றி அவருக்கு கிடைத்தது. இப்படித்தான் அந்த நால்வரைப்போல் பலரும் இருக்கிறோம். வாழ்க்கையில் முன்னேறுகிறோம் என்ற பெயரில் வேகமாக ஓடுகிறோம். வீடு, கார், சொத்து என குவிகிறது. இருந்தாலும் விடுவதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒருகட்டத்தில் ‘ஏன் ஓடுகிறோம். எதற்கு ஓடுகிறோம்’ என்று பின்னால் திரும்பி பார்க்கிறோம். கார், வீடு என எல்லாம் இருக்கிறது. மகிழ்ச்சியோ அனுபவமோ இருப்பதில்லை. கடைசியில் வாழ்க்கையே முடிந்துவிடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா... எதையும் ஒரு எல்லைக்குள் நிறுத்துங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் ரசியுங்கள். வாழ்க்கையே வாழத்தானே.. வாழ்ந்துதான் பார்ப்போமே!