பதிவு செய்த நாள்
18
ஏப்
2022
04:04
கோயில் நகரமான மதுரைதொல்லியல் சுவடுகளை சுமக்கும் தொன்மையின் சிகரமாகவும் திகழ்கிறது. உலகின் பாரம்பரிய தினமான இன்று மேலூரை சுற்றி உள்ள தொல்லியல் சின்னங்களை கோயில்கள் கல்வெட்டுக்களை நோக்கி மதுரை தானம் அறக்கட்டளை சுற்றுலா திட்ட அலுவலர் பாரதி தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் வரலாற்று பேராசிரியர் சேதுராமன் குழுவினருடன் உலக பாரம்பரிய தினமான இன்று பயணிப்போம் வாருங்கள்
திருச்சுனை அகஸ்த்தீஸ்வரம் சிவன்
கருங்காலக்குடி திருச்சுனையில் அகஸ்த்தீஸ்வரம் என அழைக்கப்படும் சிவன், முத்தாலம்மன் அய்யனார் கோயில் உள்ளன. 13ம் நுாற்றாண்டில் பிற்கால பாண்டியர்கள் கட்டிய அழக பெருமாள் விண்ணகரம் என்ற கோயில் இருந்தது. இங்குள்ள சிவன் கோயிலில் மாறவர்ம, சடையவர்ம சுந்தர, மாறவர்ம குலசேகர,பராக்கிரம பாண்டியர்கள் கல்வெட்டுகளில் நில தான தகவல் உள்ளன. கொடிமர மண்டபம் தொந்திலிங்க நாயக்கர் மகன் கட்டியுள்ளார். சுனை இருப்பதால் திருச்சுனை என பெயரானது. அகத்தியர் வழிபட்டதாக கருதும் இவ்வூர் பாண்டியர்களுக்கு வீரர்களை அளிக்கும் ஊராக விளங்கியுள்ளது.
திருக்காய்குடி என்ற தருக்காகுடி
கொட்டாம்பட்டி அருகேயுள்ள இவ்வூரின் பழைய பெயர் திருக்காய்குடி. திருக்காக்குடி என்றும் இவ்வூரில் உள்ள பாண்டியர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. காய்க்குடி என்ற பெயரே திருக்காக்குடியாக மாறியுள்ளது. இங்கிருந்த இரு சிவன் கோயில்களில் ஒன்று அழிந்து விட்டது. மற்றொன்றை தமிழக தொல்லியல் துறை வரலாற்று சின்னமாக பாதுகாக்கிறது. இந்த கோயிலில் விமானம் இல்லை. கருவறை, அர்த்த, மகா மண்டபத்துடன் பரிவார, அம்மன் சன்னதி உள்ளது. வீரர் குழு சிவன் கோயிலில் பால் நிறைந்த பூரண கும்பம் வைத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது. சுயம்பாக தோற்றிய அம்மன் கோயிலும் உள்ளது.
கருங்காலக்குடி பஞ்ச பாண்டவர் குன்று
இவ்வூரில் பஞ்ச பாண்டவர் மலைக் குன்றில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த குகை உள்ளது. வேட்டை தொழில் செய்த இவர்கள், பாயும் காளை போன்ற உருவங்களை காவி நிறத்தில் குகையில் தீட்டியுள்ளனர். முகப்பில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டு இவ்வூரின் ஆரிதன் என்பவர் குகை உருவாக்கியதை கூறுகிறது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் சிற்பம் உள்ளது. சிற்பம் செய்த சச்சணந்தி முனிவர், பாண்டிய மன்னன் அதிகாரி, சமண பள்ளிக்கு உதவிய வீமன் மீனவன் பள்ளித்தரையன் குறித்த வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன.
சிவபுரிப்பட்டி வரலாற்று கருவூலம்
சோழர், பாண்டியர் காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஊராக விளங்கியது. இங்குள்ள சுயம்பிரகாசர்சிவன் கோயிலில் 60க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஊர் வரலாறு கூறுகின்றன. கல்வெட்டுகளில் தான் தோன்றீசுவரர் கோயில் என குறிப்பிட்டுள்ளனர். தொன்மையான சப்தமாதர், முருகன், விநாயகர், ஜேஸ்டாதேவி சுவாமிகள்உள்ளனர். பிற்கால பாண்டியர், சோழர்கள் அழகிய நாயகன் உய்யவந்தான், அழகிய மணவாளன் என்ற சைவ மடங்கள் இருந்துள்ளன. இங்குள்ள அய்யனார் கோயிலுக்கு பிற்கால பாண்டியர்கள் நிலம் அளித்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
சொக்கலிங்கபுரம் அழகிய சோழீசுவரம்
இங்கு பழமையான திரவுபதி அம்மன், அழகிய சோழீசுவரம் என்ற சிவன் கோயில் உள்ளன. சிவன் கோயிலில் ஊர் வரலாறு கூறும் பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன. பாண்டியர் காலத்தில் இங்குள்ள மலையை அடிப்படையாக கொண்டு மேல்மலையூர் என பெயர் பெற்றது. சுரநாடு, சுரபிநாடு என அழைக்கப்பட்டு பாண்டிய நாட்டில் இருந்துள்ளது. கோயிலில் உள்ள குலசேகர பாண்டியன் கல்வெட்டில் அரசுக்கு வரிசெலுத்தாமல் புரவேரிகுளம் என்ற குளத்தை ஒருவர் அனுபவித்தது உட்பட பல குறிப்புகள் உள்ளது.