மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக காத்திருந்த மக்கள் தொடர் மழை மற்றும் வைகை ஆற்றில் தண்ணீர் சென்றதால் ஏமாற்றமடைந்தனர்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடந்தது.இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று நிலாச்சோறு நிகழ்ச்சி நடக்கயிருந்தது. ஆனால் மானாமதுரையில் தொடர்ந்து மழை பெய்தது.வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மானாமதுரை வைகை ஆற்றில் சென்றதால் ஆற்றில் உட்கார்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மணல் இன்றி ஆறு சேறும் சகதியுமாக இருந்தது.இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். நேற்று மானாமதுரையில் மதியம் 4:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு வரை நீடித்ததாலும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.