வீரப்பாண்டி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை வசந்த விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2022 03:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை வசந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தூக்கு தேரை தோளில் சுமந்து சென்றனர்.
அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டியில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொரோனா தடையால் நடைபெறாத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றி விழா துவங்கியது. தினசரி பாரதக்கதை, சுவாமி வீதிஉலா நடந்து வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட கரகம் வீதி உலா வந்தது. தொடர்ந்து மிக உயரமான அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள வேண்டுதல் உள்ள பக்தர்கள் விரதம் இருந்து தேரை தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லும் நூதன வைபவம் நடந்தது. தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று காலை மீண்டும் பக்தர்கள் தேரை தோளில் தூக்கி அரண்மனை வீதியில் சவாரி செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து அர்ஜுனன் தபசு, விலாட பருவமாடு வலைத்தல், அரவான் களபலி என பாரத போர் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. தேர் மீண்டும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மாலை தீமிதி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சக்கரம் பூட்டிய தேர் பக்தர்களால் இழுத்து வரும் காட்சியை மட்டுமே நாம் பார்ல்திருக்கிறோம் ஆனால் இங்கு தேரையே இளைஞர்கள் தோளில் சுமந்து செல்லும் வினோத நிகழ்வு காண்போரை பிரமிக்க வைப்பதாக இருந்தது.