விஷ்ணுவின் ஆயுதங்களில் முக்கியமானது சக்கரம். இதனை சக்கரத்தாழ்வார் என்பர். ஏன் தெரியுமா? கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித்தவித்த போது, ஆதிமூலமே! என்று கதறி பெருமாளை அழைத்தது. பெருமாளும் கருடன் மீதேறி விரைந்தோடி வந்தார். அப்போது பெருமாளின் ஆயுதங்களான கதாயுதம், நந்தகம் என்னும் வாள் இரண்டும் அவரின் உத்தரவுக்காக காத்திருக்க, சக்கரம் மட்டும்,பக்தனின் சங்கடத்தைப் போக்குவது என் கடமை, என்று சீறிப் புறப்பட்டது. முதலையைக் கொன்று யானையைக் காத்தது. இவ்வாறு, பக்தர்களின் துன்பம் போக்குவதில் முதல்வராக விளங்கியதால் ஆழ்வார்களுக்கு சமமான அந்தஸ்தை அளித்து சக்கரத்தாழ்வார் என்று போற்றுகின்றனர்.