கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் சித்ராபவுர்ணமி பூஜையை சிறப்பாக நடத்துவர். இங்கு உள்ள வீரநாராயணமங்கலம் முத்தாரம்மன் கோயிலில் வெம்மை தணிக்கும் விதமாக பழங்கள், காய்கறிகள், எலுமிச்சை, சர்க்கரை, சுக்கு, வெல்லம் கலந்த பானகம் அம்மனுக்குப் படைத்தபின் பக்தர்களுக்கு வழங்குவர். இதன்பின் கன்னியாகுமரி கடலில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் இரண்டையும் ஒரே நேரத்தில் தரிசிப்பர். குமரி பகவதி அன்னையை தரிசித்துவிட்டு கடற்கரையில் சித்ரான்னம் (எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம் போன்றவை) சாப்பிடுவர். இரவில் நிலவு ஒளியில் அமர்ந்து சாப்பிடுவதால் இதனை நிலாச்சோறு என்பர்.