சைவ, வைணவ சமரச நோக்கத்தில் சொல்கிற பாப்புலர் வசனம் அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு!. இது நம் எல்லோருக்கும் தெரிந்தது. இதிலே அறியாதவன் என்பதில் உள்ள வல்லின றியை இடையினமாக மாற்றி அரியாதவன் என்று சொல்வார்கள். இதற்கு ஹரி யாகிய யாதவ குலத்தில் பிறந்த கண்ணன் என்று அர்த்தம். அவன் வாயிலே மண்ணைப் போட்டுக் கொண்டு விட்டு யசோதைக்கு லோகம் முழுவதையும் காட்டினான் அல்லவா? அதைத்தான் அரி யாதவன் வாயில் மண்ணு என்பது. சரி, அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இப்படி ஒன்றான இவர்களிலே, ஹரி மட்டும் லோகம் முழுவதையும் காட்டினான்- என்று எதற்காகச்சொல்ல வேண்டும்? எதற்காகவா? இதிலேயும் பெரிய தத்துவம் இருக்கிறது. ஒரே பிரம்மம் தான் ஹரி, சிவன் இரண்டு பேரும். அதனாலே அவர்கள் ஒன்றே தான். ஆனால், அந்த ஒரே பிரம்மத்தை நிர்குணம், சகுணம் என்று இரண்டு நிலைகளில் பாவிக்க வேண்டியிருக்கிறது. இதில் உலக விவகாரம் இல்லாத நிர்குணநிலை தான் சிவன். உலக விவகாரத்தை நடத்தும் சகுணமே ஹரி. மண்ணை தின்று உலகம் முழுவதும் தன் வாயில் அடங்கியிருப்பதாக அவன் காட்டியபோது, இந்த உண்மையைத் தான் எடுத்துக் காட்டியிருக்கிறான். இதில் அரி யாதவன் வாயில் மண்ணு என்று சொல்லி இதை ஞாபகப்படுத்திவிட்டால், விட்டுப்போன சிவன் நிர்குணம் என்பதையும் சொன்னதாகி விடுகிறது.