பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று பெருமாள் திருக்கோயில் திரும்பினார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடக்கிறது. இக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் விழா கோயில் வளாகத்தில் நடந்தது. இந்த ஆண்டு ஏப்., 11-இல் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் ஏப்., 15 இரவு வெள்ளிக் கிண்ணத்தில் பாயாசம் சாப்பிட்டபடி, நீலப் பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார். பின்னர் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். ஏப்ரல் 17 அன்று இரவு 7:00 மணிக்கு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்த அழகர் விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலித்தார்.
பின்னர் கருட வாகனம் மற்றும் ராஜாங்க திருக்கோலத்தில் வைகையாற்றில் வலம் வந்தார். தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோடாரி கொண்டை இட்டு கத்தி வளரி, தடி ஏந்தி பூப்பல்லக்கில் எழுந்தருளி னார். மேலும் நாள் முழுவதும் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6:00 மணிக்கு மேல் கோயில் முன்பு கருப்பண்ண சாமியிடம் விடைபெற்றுச் சென்ற அழகருக்கு மீண்டும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 6:30 மணிக்கு பெருமாள் தன் ஆஸ்தானம் அடைந்தார். இரவு கண்ணாடி சேவையில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க கோலாகலத்துடன் கொண்டாடினர். இன்று உற்சவ சாந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.