பதிவு செய்த நாள்
21
ஏப்
2022
10:04
ஓசூர்: மத்திகிரியில் நடந்த, கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் இரு மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி அம்மன் நகரிலுள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று மதியம், 12:30 மணிக்கு மேல், மிடிகிரிப்பள்ளியிலிருந்து தேரோட்டம் துவங்கியது. அலங்கரித்த தேரில் அம்மன் உற்சவமூர்த்தி அமர வைக்கப்பட்டு, அப்பகுதி பெண்கள் புடவை, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை அம்மன் தேர் முன் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் பாலசுப்பிரமணியன், வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மிடிகிரிப்பள்ளி பசவேஸ்வர சுவாமி கோவில் முன், தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லுாரி வழியாக, மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேர் சென்றது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இன்று அலகு குத்தும் நிகழ்ச்சி, மதியம், 2:45 மணிக்கு அம்மன் உற்சவம், மாலை, 6:00 மணிக்கு, சிம்ம வாகன உற்சவம், இரவு, 8:00 மணிக்கு தான வீர சூர கர்ணா நாடகம் நடக்கிறது.