தென்காசி : தென்காசியில் இன்று (25ம் தேதி) கோ மாதா பூஜை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. குற்றாலம் ஐந்தருவி விவேகானந்த ஆசிரம வெள்ளி விழா, சாரதா ஆசிரமத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா, விவேகானந்தரின் 150வது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. விழா வரும் செப்.2ம் தேதி செங்கோட்டை பிரானூர் கிருஷ்ண பவன் திருமண மண்டபத்திலும், 9ம் தேதி தென்காசி திருக்குறள் மண்டபத்திலும், 16ம் தேதி ஐந்தருவி விவேகானந்த ஆசிரமத்திலும் நடக்கிறது. செப். 9ம் தேதி தென்காசியில் 108 கோ மாதா பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (25ம் தேதி) தென்காசி சிவா திருமண மண்டபத்தில் கோ மாதா பூஜை ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமி அகிலானந்தா தலைமை வகிக்கிறார். கோ மாதா பூஜையை முன்னிட்டு கிராமங்களில் விளக்கு பூஜை, மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது, முதியோர்களுக்கு ஆடைகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.