பதிவு செய்த நாள்
21
ஏப்
2022
04:04
தொண்டாமுத்தூர்: சுண்டபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர் மெயின் ரோட்டில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை திருவிழா, திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல், கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்பின் நாள்தோறும் மாலை, கலச விளையாட்டு நடந்தது. நேற்று முன்தினம் காலை, விநாயகர் பொங்கலும், மாலையில் நகை அழைத்தலும் நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 10:00 மணி முதல் பகல், 2:00 மணி வரை, கீழ் சித்திரைசாவடியில் இருந்து கரகம் அழைத்து வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்தனர். அதன்பின் மகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல், 2:30 மணிக்கு, பொங்கல் வைக்கப்பட்டது. மாலையில், அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.