சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் நடந்தது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், சித்சபையில் உள்ள மூலவர் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு, ஆண்டிற்கு 6 முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலும், மற்ற காலங்களில் நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் மகா அபிஷேகம் நடக்கும். சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாஅபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலை 10:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமி கனகசபையில் எழுந்தருளினர். நடராஜ சுவாமிக்கு லட் சார்ச்சனை , கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா தீபாராதனை நடந்தது. பின், கிழக்கு கோபுரம் அருகே சிறப்பு மகா ருத்ரயாகம் நடந்தது. மாலை துவங்கி நள்ளிரவு வரை மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.