சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்திரை பொங்கல் விழா கடந்த ஏப். 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். விரதம் இருந்த பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர். முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு உள்ள பூக்குழி திடலில் அக்னி வார்த்தல் நிகழ்ச்சி, விரதமிருந்த பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா வந்த பின்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏற்பாடுகளை பூ மாரியம்மன் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.