மயிலாடுதுறை : மாம்புள்ளி நாகமுத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை பால்குட திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாம்புள்ளி வீரசோழன் ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த நாக முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் சித்திரை பால்குட திருவிழா கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கியது.அதனை தொடர்ந்து 10 நாட்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருவிழாவின் முக்கிய நாளான நேற்று வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், காவடி, பால்குடம் உள்ளிட்டவை மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தது.பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடந்தது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், திருவாலங்காடு திமுக ஊராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் கதம்பவள்ளி சின்னையன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள்,கிராம வாசிகள், இளைஞர் அணி, மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.