ரங்கா ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2022 08:04
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா ரங்கா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை வீதிகளிலும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் எட்டாம் திருநாளில் காலை, நம்பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து, சித்திரை தேர் அருகே, வையாளி கண்டருளிய நம்பெருமாள், கண்ணாடி அறை சென்றடைந்தார். தேரோட்டத்தை முன்னிட்டு 4:45 கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், காலை 5:15 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். இன்று காலை 6 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ சித்திரை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு மேற்கு மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை, சத்தாபரணம் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.