பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 32 ஆம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த 29 ம் தேதி, காலை 5-30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அலங்கார பூஜைகள் கொடியேற்றுதல் தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் துவங்கியது. அன்றிரவு குடியழைப்பு நிகழ்ச்சியும், மறுநாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும், தேர் ஊர்வலமும் நடந்தது. காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் நீர் வெட்டுதல், பூஜை தொடர்ந்து மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் கரகம் வீடுகளுக்கு சென்று அருள்பாலித்து பின்னர் குடி விடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மாரிமுத்து, செயலாளர் பிரபாகரன், ஆலோசகர் சேகர், பொருளாளர் நிசார், நிர்வாகிகள் சந்தானம், செல்வராஜ் தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.