திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2022 04:05
திருப்புத்துார்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் தெப்பத்துடன் வசந்தப் பெருவிழா நிறைவடைந்தது.
இக்கோயிலில் ஏப்.,21 ல் பூச்சொரிதல் விழா நடந்து, மறுநாள் காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தினசரி இரவில் உற்ஸவ அம்பாள் பல்வேறு வாகனங்களில் குளத்தை வலம் வந்தார். ஐந்தாம் திருநாளில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து ஏப்.,29 ல் அம்பாள் ஊஞ்சல் உற்ஸவமும், ஏப்.,30ல் அம்மன் ரத ஊர்வலமும் நடந்தது. பத்தாம் திருநாளில் காலையில் அம்மனின் பிரதிநிதியாக திரிசூலத்திற்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடந்து, மூலவருக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். இரவு 7:50 மணி அளவில் உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்து தெப்பத்தில் எழுந்தருளினார். கோயில் குளத்து படித்துறையில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து குளத்தை மும்முறை வலம் வந்து தெப்ப உத்ஸவம் நிறைவடைந்தது. பின்னர் அம்மனுக்கு காப்புக் களைந்து விழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினர் செய்தனர்.