பதிவு செய்த நாள்
03
மே
2022
08:05
உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி வாசல் களில் சிறப்பு தொழுகை நடந்தது. ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள், 30 நாட்கள் விரதமிருந்து, பண் டிகையை நிறைவு செய்தனர். இஸ்லாமிய பெருமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு திருப்பூரிலுள்ள பள்ளி வாசல்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. பெரியகடை வீதி பெரிய பள்ளிவாசல், பெரியதோட்டம் பள்ளிவாசல், மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பள்ளிவாசல், காதர்பேட்டை, பாத்திமா நகர், ஸ்ரீ நகர், காலேஜ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில், சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.தொழுகைக்கு பின், ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏழை, எளியோருக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இன்று, ஈகை திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை. உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை புனித மான ரம்ஜான் மாதம் முடிந்து, மறுநாள் வருவது இதன் கூடுதல் சிறப்பு. ஏனென்றால், இந்த ரம்ஜான் மாதத்தில்தான் இறைவேதமான குர்-ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்டது. நன்மை, தீமையை பிரித்து, மக்களுக்கு நேர்வழி காட்டும் அந்த வேதத்தில், இந்த ரம்ஜான் மாதத்தில் நோன்பு வையுங்கள் என்று, இறைவன் கட்டளையிடுகிறான்.விடியற்காலை முதல் மாலை அந்தி சாயும் நேரம் வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பதே, நோன்பு இருப்பதன் அர்த்தமாகும். நோன்பை கொண்டு இறையச்சம் உடையவர்களாகி விடலாம் என்று, குர்-ஆன் தெளிவாக கூறுகிறது. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், ஏற்ற பின் விளைவுகளை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். செயல்புரிவதற்கு முழு சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு, அவனுடைய செயல்களின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தீய செயல்களுக்கு ஏற்ற பின் விளைவுகள், துயரம் மிக்கதாகவே இருக்கும். இதைப் பற்றி அச்சம் கொள்வதே இறையச்சம் என்பதாகும். நோன்பிற்கும், இறையச்சத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சந்தேகம் எழலாம். ஒருவேளை உணவை உட்கொள்ளாததால் இறையச்சம் வந்து விடுமா என்று பலர் கேட்கின்றனர்.ஒருவேளை உணவைத் தவிர்த்து கொள்ளுதல் என்பது அல்ல கேள்வி. இயல்பான வாழ்க்கை முறையைத் தவிர்த்து, மாற்று வாழ்க்கையின் பக்கம் வர, சமுதாய மக்களுக்கு அழைப்பு விடப்படுகிறது.
அந்த மாற்று வாழ்க்கை என்பது, மனோ இச்சைப்படி வாழ்வதை விட்டு, விட்டு இறைவனின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு வாழ விடப்படும் அழைப்பே ஆகும்.அதன் ஒரு பயிற்சியாகத் தான் நோன்பு திகழ்கிறது. அதாவது, யார் இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ முன் வருகின்றனர் என்பதை, பரிசோதித்துக் கொள்வதே, நோன்பின் சிறப்பு அம்சமாகும். மறைமுகமாக ஒருவர் உணவருந்தி, நோன்பு இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இந்த உண்மை இறைவனுக்கு தெரிந்துவிடும் என்பதை உணர்ந்து தான், இந்த நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது.எனவே, நோன்பை கடைபிடிப்பவர்கள், தாம் இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ முன் வருவதாக உறுதி கொள்கின்றனர். இந்த கட்டளையை ஏற்றுக் கொண்டால், மற்றஅறிவுரைகளையும் ஏற்றுக் கொள்ள முன் வருவதாகப் பொருள்படும்.
இவ்வாறாக, அனைவரும் இணைந்து இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாழ்ந்தால், தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கி விடலாம். எனவே தான், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லக்கூடிய நாளாக இன்றைய பெருநாள் திகழ்கிறது. எவ்வாறு நோன்பு சமயங்களில் உண்ணாமல் இருக்கிறீர்களோ, அதைப் போலவே வாழ்நாள் முழுக்க பிறருடைய சொத்து, செல்வங்களை அநியாயமாக உண்ணாதீர்கள்... என்று இறைவன் குர்-ஆனில் உறுதியாக கூறுகிறான். இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம் என்று கூறும் இஸ்லாம், அதை முழுக்க நடைமுறைப்படுத்துவது ரம்ஜான் மாதத்தில் தான். ஆம்! ஜகாத் எனும் இஸ்லாத்தின் நான்காவது கடமை உரிய முறையில் நிறைவேற்றப்படுகிறது. செல்வந்தர்களின் சொத்து மீது இறைவன் விதித்த வரியே, ஜகாத் அது இல்லாதவர்களுக்கு அள்ளித் தரப்படுகிறது. ரம்ஜான் மாதம் முழுக்க மசூதிகள் மக்களால் நிரம்பி வழிந்தன. தொழுபவர்களும், குர்-ஆன் ஓதுபவர்களும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களும் என்று பார்க்கவே கண்கொள்ளாத காட்சியாக, கண்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.இந்த நிலை ஒரு மாதம் மட்டுமின்றி, ஒரு வாழ்நாள் முழுக்க நீடித்தால் இந்த வாழ்க்கை வசந்தமாக அல்லவா மாறும். பெருநாள் என்பது ஒரு நாள் பண்டிகை அல்ல. நமக்கு ஒவ்வொரு நாளும் திருநாள் தான் என்று மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இந்த ஈகைப் பெருநாளில் இறைவனிடம் கையேந்துவோம். உலகம் முழுக்க அமைதியும், சமாதானமும் நிலவட்டும். மக்கள் உள்ளங்களில் கருணையும், உதவியும், நன்றியும், நட்பும் மலரட்டும். ஆமின்.எல்லாருக்கும் ஈத் முபாரக்!