பதிவு செய்த நாள்
03
மே
2022
07:05
வாலாஜாபாத், :திருமுக்கூடல் ஆற்றங்கரை ஓரம், அப்பர் வெங்கடேசபெருமாள் கோவில் கட்டுமான சேதத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் அடுத்த, திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், வீர ராஜேந்திரன் கட்டிய கோவிலாகும். இது, கி.பி., 1069 காலத்தில் வேத கல்லுாரியாகவும். 15 படுக்கை கொண்ட மருத்துவமனையாகவும் இருந்துள்ளது. தற்போது, தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த நவம்பர் மாதம், செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகள் சமங்கமிக்கும் பகுதியில், அளவுக்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், கோவிலை ஓட்டி இருக்கும் தடுப்பு சுவர் சேதமடைந்தது. இதை சம்மந்தப்பட்ட துறையினர் சீரமைக்கவில்லை என, பக்தர்கள் இடையே புகார் எழுந்து உள்ளது.எனவே, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக, காஞ்சிபுரம் தொல்லியல் துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்புக்கொள்ள முயன்ற போது, தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.