காங்கேயம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் சித்திரை பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2022 10:05
காங்கேயம்: காங்கேயம் தேவாங்கபுரத்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மாரியம்மன் கோவில் சித்தரை பொங்கல் திருவிழா முன்னிட்டு நேற்று பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார்கள் . சவுடேஸ்வரி அம்மன், மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா கடந்த மாதம் 26ம் தேதி பொங்கல் சாட்டுடன் துவங்கியது. 29ம் தேதி குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து மே 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் இரவு 9:00 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு கொலு வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
2ம் தேதி இரவு மாரியம்மனுக்கு கம்பம் கட்டுதல் நிழ்ச்சியும், 3ம் தேதி காங்கேயம் பழைய கோட்டை சாலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து சென்று அம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து சென்றனர். இதன் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து மாரியம்மனுக்கு பூவோடு கொண்டு செல்லும் நிகழ்ச்சியில், பக்தர்கள் அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் சென்றனர். தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் ஆட்டம் ஆடி சென்றனர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.