பதிவு செய்த நாள்
05
மே
2022
03:05
மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்களை நிர்வகிக்க இதுவரை இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அப்பணியிடத்தை துணை கமிஷனராக, ஹிந்து அறநிலையத்துறை தகுதி குறைப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஹிந்து அறநிலையத் துறையில், 30 உதவி கமிஷனர்களுக்கு, துணை கமிஷனராக பதவி உயர்வு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழல்: இதற்காக, புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், சென்னை திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் இணைகமிஷனர் பணியிடங்களை, துணை கமிஷனர் பணியிடங்களாக தகுதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத் துறையின் கீழ் நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதில் துணை கமிஷனர் அந்தஸ்தில் நியமிக்க விதிகளில் இடம் உள்ளது.அப்படி செய்யாமல், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கிய கோவில்களின் இணை கமிஷனர் பணியிடங்களை தகுதி குறைப்பு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்து அமைப்பினர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், கோவில்களுக்கும், ஆதீன மடங்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலை நிர்வகிக்க இணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி தேவை.வளர்ச்சியை பாதிக்கும்மேலும், இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள், விரைவில் துவங்க உள்ளன. இச்சூழலில் இணை கமிஷனர் பணியிடத்தை, துணை கமிஷனர் பதவியிடமாக அந்தஸ்து குறைப்பு செய்தது ஏற்புடையது அல்ல.துணை கமிஷனர், கோவில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது; மேல் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இது திருப்பணிகளை பாதிக்கும்.இவ்வாறு கூறினர்.
அறநிலையத்துறை ஊழியர்கள் கூறியதாவது: நீதிமன்ற வழக்கால் உதவி கமிஷனர்களுக்கு பதவி உயர்வு, 10 ஆண்டுகளாக தாமதம் ஆனது. தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டதை தொடர்ந்து, 30 பேருக்கு துணை கமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அதற்காக மதுரை, ராமேஸ்வரம், திருத்தணி கோவில்களின் பணியிடங்களை தகுதி குறைப்பு செய்தது ஏற்புடையது அல்ல. துணை கமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி நியமித்தது கோவில் வளர்ச்சியை பாதிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதிகாரிகள் கூறுகையில், இது தற்காலிக ஏற்பாடு தான். துணை கமிஷனராக உள்ளவர்களுக்கு விரைவில் இணை கமிஷனர் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது என்றனர்.
அதிகாரிகள் இடமாற்றம்: இணை கமிஷனர்கள் ஏழு பேர் தமிழக அளவில் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்ல துரை, மதுரை மண்டல அறநிலையத்துறைக்கு மாற்றப் பட்டார். அவருக்கு பதில் துணை கமிஷனர் அந்தஸ்தில் தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் செயல் அலுவலர் மாரியப்பன், ராமேஸ்வரம் கோவிலுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிருந்த பழனிகுமார், சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். அழகர் கோவில் கள்ளழகர் கோவில் நிர்வாகத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த திண்டுக்கல் மாவட்ட உதவி கமிஷனர் அனிதா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை உதவி கமிஷனர் ராமசாமி அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.