பதிவு செய்த நாள்
05
மே
2022
06:05
சென்னை:தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்துக்கு பிரச்னை இல்லாமல், நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். இதை அரசியலாக்க வேண்டாம்; சுமுகமான தீர்வு காணப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து, மனமுவந்து சுமந்து வரும் ஒரு ஆன்மிக நிகழ்வு. பல்லக்கு துாக்குபவர்கள் பாரம்பரியமாக, ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள். ஆதீனத்தின் சீடர்களும், இப்பல்லக்கை சுமந்து செல்வர். இதை பெருமைக்குரிய விஷயமாக நினைத்து, பட்டினப் பிரவேச நிகழ்ச்சி யில் பங்கேற்பர்.
வரும் 22ம் தேதி நடப்பதாக இருந்த, தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்துள்ளது. இது, அப்பகுதி மக்கள் இடையே வருத்தத்தையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு பிரிவின், மத சுதந்திர உரிமை அடிப்படையில், தருமபுர ஆதீனம், பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது. எனவே, இந்நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
பா.ம.க., - ஜி.கே.மணி: ஆன்மிகத்தை ஏற்போர், மறுப்போர் உண்டு. ஆதீனங்கள் தொன்று தொட்டு தமிழ் வளர்த்தவர்கள். தமிழ் இலக்கியங்களை போற்றி, வாழ்வியல் நெறிகளை வகுத்து கொடுத்தவர்கள். ஆதீனங்கள் பல்லக்கு துாக்கும் நிகழ்ச்சி, தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதற்கு தடை என்பது, மதத்திற்குள் நுழைவதாக அமைந்து விடும். தேவாலய பிரச்னைக்குள், முஸ்லிம் பிரச்னைக்குள் செல்வது ஏற்கத்தக்கதல்ல. மதம் சார்ந்த பிரச்னை என்பதால், இதில் தடை விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. தொன்று தொட்டு நடப்பது நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: இது பல நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. மத சம்பந்தப் பட்ட விஷயங்களுக்கு தடை இல்லை என்பது, அனைவரும் அறிந்தது. மனிதர்களை மனிதர் துாக்கி, கூலி வாங்குவது தவறு. இது கூலி வாங்கும் விஷயம் அல்ல. தாய், தந்தையை எவ்வாறு துாக்கி செல்கிறோமோ, அதுபோன்ற நிகழ்ச்சி. இதற்கு தடை என்பதை ஏற்க முடியாது. இந்நிகழ்ச்சியை உடனடியாக நடத்த, அரசு முன்வர வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: ஆதீனங்களுக்கு தெய்வீக பேரவை என்ற அமைப்பை உருவாக்கியவர் கருணாநிதி. அவர் ஆட்சிக்கு பின், அந்தப் பேரவை முடக்கி வைக்கப்பட்டது. ஏப்., 27ம் தேதி, முதல்வர் முதன்முதலாக, ஆதீனங்களை வரவழைத்து, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தற்போது எழுந்துள்ள பிரச்னை குறித்து, முதல்வர் உத்தரவின்படி, சந்நிதானத்துடன் பேசினோம்.
அவருக்கு எப்படி எல்லாம் அழுத்தம் தருகின்றனர் என்பதை தெரிவித்தார். நாங்கள் தமிழ் சார்ந்தவர்கள்; தமிழை வளர்ப்பவர்கள். தமிழுக்குரிய ஆட்சி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தான். நாங்கள் எவ்விதமான எதிர்மறையான கருத்து கூறவில்லை என்றார். ஒரு சிலர் தாங்கள் செய்த தவறிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, இதை அரசியலாக்க பார்க்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் கூறியுள்ளார்.இப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். சந்நிதானத்துக்கும், பட்டினப் பிரவேசத்துக்கும் பிரச்னை இல்லாமல், நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். இதை அரசியலாக்க வேண்டாம்; சுமுகமான தீர்வு காணப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
காங்கிரஸ் பேச்சுக்குஅ.தி.மு.க., எதிர்ப்பு!
தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசம் தொடர்பான விவாதத்தில், காங்., - செல்வப்பெருந்தகை பேசுகையில், ஆதீனங்களை கட்டுப்படுத்த வேண்டும். தமிழர் பண்பாட்டை பின்பற்ற வேண்டும். மனிதனை மனிதன் சுமப்பதை அறவே அகற்ற வேண்டும், என வலியுறுத்தினார்.
அவர் கூறிய சில கருத்துக்களுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி கொறடா வேலுமணி எழுந்து, எந்த முக்கிய பிரச்னையாக இருந்தாலும், அமைச்சருக்கு பதில் இவர் பேசுகிறார், என்றார்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன், அவர் கருத்தை அவர் கூறுகிறார். அதை கேட்க வேண்டும், என்றார். சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, உங்களுக்கு உள்ள உரிமை, அவருக்கும் உள்ளது, எனக் கூறி, அ.தி.மு.க.,வினரை அமர வைத்தார்.