பதிவு செய்த நாள்
06
மே
2022
06:05
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழா, நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை அன்ன வாகனத்தில் ஏகாந்த சேவையில் பெருமாள் வீதி வலம் வந்தார். தொடர்ந்து தினமும் காலை பல்லக்கில் பெருமாள் ரெங்கமன்னார், ராமர், காளிங்க நர்த்தனம், கீதா உபதேசம் உள்ளிட்ட திருக்கோலங்களிலும், மாலையில் சிம்ம, சேஷ, கருட, அனுமான், யானை, குதிரை வாகனங்களில் வீதி வலம் வருவார். மே 11 அன்று காலை 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவமும், மாலை புஷ்ப பல்லக்கில் வீதி வலம் நடக்கும். மறுநாள் குதிரை வாகனத்தில் திருமங்கையாழ்வார் வேடுபரியாகம் நடக்கிறது. மே 13 மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் மற்றும் சப்த வாரணம் நடக்க உள்ளது. மே 14 அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.