பதிவு செய்த நாள்
12
மே
2022
08:05
பெங்களூரில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விஸ்வரூப பெருமாள் சிலைக்கான மஹா யந்திரத்தை, சென்னையில் இன்று பொதுமக்கள் தரிசிக்கலாம். பெங்களூரு, ஈஜிபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில், அதன் அறங்காவலர்களில் ஒருவரான சதானந்தா என்பவர், ஒரே கல்லாலான பிரமாண்ட பெருமாள் சிலை நிறுவ முடிவு செய்தார்.அதற்கான கருங்கல்லை திருவண்ணாமலை மாவட்டம், பெரியகொரக்கோட்டை எனும் ஊரில் கண்டுபிடித்து, 2014ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடு சிலை செய்யும் பணிகள் துவங்கப்பட்டன.ஸ்ரீ வர வேங்கட மகாவிஷ்ணு விஸ்வரூப சிலை, பீடத்துடன் சேர்த்து,108 அடி உயரத்தில் ஆதிசேஷன் உள்ளிட்ட, 11 முகம் மற்றும், 22 கைகள் கொண்டுள்ளது.இந்த விஸ்வரூப சிலை இம்மாத இறுதிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலையின் அடியில் வைப்பதற்கான, மஹா யந்திரம் தயாரித்து உரு செய்யப்பட்டுள்ளது.மஹா யந்திரம் புன்னிய ஸ்தலங்களின் புறப்பாட்டை, அகோபில மடத்தின் ஜீயர் அழகிய சிங்கர், பெங்களூரில் துவக்கி வைத்தார். நேற்று திருப்பதியில் இருந்து புறப்பட்டு, மாலை திருவள்ளூர் வீரராக பெருமாள் கோவில் வந்து, அங்கிருந்து தி.நகர், சிருங்கேரி மடம் வந்தடைந்தது.அங்கு ஏராளமான பக்தர்கள் மஹா யந்திரத்தை தரிசித்தனர். இன்று காலை, 6:30 மணி முதல் காலை 8:00 மணி வரை அயோத்தியா மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் காஞ்சிபுரம் வழியாக தமிழகத்தில் முக்கிய பெருமாள் கோவில் ஸ்தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, 18ம் தேதி பெங்களூரு செல்கிறது. -நமது நிருபர்-