போத்தனூர்: சுந்தராபுரம் அருகே காமராஜ் நகரிலுள்ள ஜெயமாரியம்மன் கோவில் முதலாமாண்டு சித்திரை திருவிழா கடந்த 1 ல், ஊர் எல்லை கட்டுதலுடன் துவங்கியது. மறுநாள் கணபதி ஹோமம். முகூர்த்த கால் நடுதலும் மூன்றாம் நாள், கம்பம் போடுதலும் நடந்தன.
தொடர்ந்து தினமும் கம்பம் சுற்றி விளையாடுதலும், 8ல், திருவிளக்கு வழிபாடும் நடந்தன. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, குறிச்சி பொங்காளி அம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரகம், முளைப்பாரி, பூச்சட்டி மற்றும் அணிக்கூடை ஊர்வலம் துவங்கி, அம்மன் சிம்ம வாகனத்தில் பின்தொடர மதியம் கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் மாவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை மற்றும் பொங்கல் வழங்குதல் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர். இன்று மாலை அம்மன் திருவீதி உலாவுடன் மஞ்சள் நீராட்டு நடக்கிறது. நாளை இரவு, 7:00 மணிக்கு மறுபூஜை மற்றும் வாண வேடிக்கையுடன் விழா நிறைவடைகிறது.